புதுடெல்லி,மே.19-
தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தனியார் தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று ஊரக வளர்ச்சித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு தொழில்துறையிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, புதிதாக நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் மசோதா என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து, அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. தற்போது, அந்த நிலைக்குழு தனது பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
அதன்படி, ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையைப் போல, அரசு இனிமேல் தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ரெயில்வே, நெடுஞ்சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பொதுப்பணிகளுக்காக மட்டுமே நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும்போது, கிராமப்புறமாக இருந்தால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் நான்கு மடங்கும், நகர்ப்புறமாக இருந்தால் இரண்டு மடங்கும் கொடுக்க வேண்டும். தேவையான நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதம் பேரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். வாங்கிய நிலத்தை மேம்படுத்தி, அதில் 20 சதத்தை நில உரிமையாளருக்கே திருப்பி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளில் நிலத்தை விற்றாலோ வேறு ஒருவருக்கு மாற்றினாலோ, அதில் 20 சதம் லாபத்தை நில உரிமையாளருக்குத் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.
இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதும் தடுக்கப்படும் என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்தப் பரிந்துரைகள் தொழில்மயமாக்கலை, குறிப்பாக உற்பத்தித்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷும், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அமைச்சரவையின் விவாதத்துக்கு வரும்போது அதைக் கடுமையாக எதிர்க்கப்போவதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துவதில் அரசின் பங்கு இருக்கக் கூடாது என்ற அளவுக்கு இன்னும் நம்நாடு வளர்ச்சியடையவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் தனிப்பட்டவர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகின்றன என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments