ஊட்டி, மே. 17-
நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. கத்திரி வெயிலின் வெம்மைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (வெள்ளிக்கிழமை) மலர் கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
மலர் கண்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் இடம் பெறுகின்றன. 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள 3 லட்சம் மலர்கள் கண்காட்சி அரங்குகளில் ஜப்பானின் இக்கிபானா முறையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கார்னேஷன், ஜெர்புரா, லில்லி, அந்தூரியம், சாமந்தி, டேலியா, ரென்னன், பிகோனியா, இன்காமேரிகோல்டு, ஆஸ்டர் உள்பட பல்வேறு வெளிநாட்டு மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. தாவரவியல் பூங்காவின் நுழைவுவாயில் வண்ண வண்ண மலர்களாலும், நீலகிரி மலைத்தோட்ட காய்கறிகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. கண்காட்சியில் பல்வேறு வண்ண 5 ஆயிரம் மலர்களால் புலி, 5 ஆயிரம் மலர்களால் வரையாடு மற்றும் 10 ஆயிரம் மலர்களால் வட்ட வடிவில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.
கோவை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கொடைக்கானலில் செயல்படும் தோட்டக்கலைத்துறைகளின் சார்பிலும் ராஜ்பவன் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 116-வது மலர் கண்காட்சியின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் கண்டு களிப்பதற்கு வசதியாக கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி விழாக்கோலம் பூண்டுள்ளது.
09:38
Tags :
latest tamilnadu news
,
ooty flower show
,
tourisum
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments