Thursday, May 17, 2012

thumbnail

இன்று மாலை குருபெயர்ச்சி: ஆலங்குடி, திட்டை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

தஞ்சாவூர், மே.17-
 
நவக்கிரகங்களில் முதன்மையானதாக கருதப்படுபவர் குரு. மேலும் சுபக்கிரகமாக குருபகவான் திகழ்கிறார். ஒருவருக்கு தலைமை பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை குருபகவானின் கருணை பார்வை மூலம் கிடைக்கிறது.
 
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம் தங்கியிருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.27 மணிக்கு நடைபெறுகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு இடம்பெயர்கிறார். குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அவர் பெயர்ச்சியாகிறார். இது தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த குருபெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு கெடு பலன் குறையும் என்று கூறப்படுகிறது.
 
தமிழகத்திலேயே முதன்மை வாய்ந்த குரு பரிகார தலமாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி கடந்த 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது.
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் ஜுன்13-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும். இன்று (வியாழன்) மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடைபெறும்
 
குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலிலும் இன்று மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது.
 
இங்கும் இன்று காலை முதல் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About