பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமருக்கு ஜெ கடிதம்
Sunday
2012-05-2012
சென்னை: கர்நாடக அரசு, பெண்ணையாற்றில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. தமிழக மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா நேற்று அனுப்பி கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் உருவாகி, தமிழ்நாட்டு வழியாக பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், ஆற்றின் நீரோட்டத்தை மாற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள் ளதாக தெரிய வருகிறது. இதை உங்கள் கவனத்துக்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக பெண்ணை ஆறு ஓடுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால், அதனால் மேல்குறிப்பிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது, தற்போது அமலில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தடுப்பணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சப்ளையும் தமிழகத்தில் பாதிக்கப்படும். பெண்ணையாறு கர்நாடகா - தமிழகம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஓடும் ஆறு என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 1892ம் ஆண்டு மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளில் பெண்ணையாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு முன்கூட்டி தெரிவிக்காமல், ஆற்றின் குறுக்கே எந்த பகுதியிலும் தடுப்பணை கட்ட கூடாது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது, ஆற்றின் நீரோட்டத்தை மாற்றுவது அல்லது ஆற்று நீரை சேமித்து வைப்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபடக் கூடாது.
ஆனால், தடுப்பணை கட்ட முடிவெடுத்துள்ள கர்நாடக அரசு, இதுகுறித்து தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தமிழகத்திடம் இருந்து கர்நாடக அரசு ஒப்புதலும் பெறவில்லை. மேலும், தடுப்பணை கட்டும் திட்டம் குறித்த எல்லா விவரங்களையும் தெரிவிக்கும்படி கர்நாடக அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அத்துடன், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ள கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எந்த தகவலையும் கர்நாடக அரசு வழங்கவில்லை. எனவே, இந்த பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, பெண்ணையாற்றில் தடுப்பணை போன்ற எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ள கூடாது என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments