Saturday, May 26, 2012

thumbnail

பிரதமர் உட்பட 15 அமைச்சர்கள் மீது ஹசாரே குழுவினர் ஊழல் குற்றச்சாட்டு

பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் 13 மத்திய அமைச்சர்கள் மீது அண்ணா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை அண்ணா ஹசாரே குழு செய்தியாளர்கள் முன்னிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அறிக்கையில், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
நிலக்கரி அமைச்சகம் மன்மோகன் சிங் வசம் இருந்தபோது ஊழல் நடந்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
பிரதமரை ஊழல் செய்ததாக ஹசாரே குழு இதுவரை குற்றம்சாட்டியது கிடையாது. முதன்முறையாக இப்போதுதான் குற்றம்சாட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர், பிரணாப் முகர்ஜி தவிர, மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், மு.க. அழகிரி, ஜி.கே. வாசன், சரத் பவார், எஸ்.எம். கிருஷ்ணா, கமல்நாத், பிரஃபுல் படேல், பரூக் அப்துல்லா, கபில் சிபல், சல்மான் குர்ஷித், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், வீரபத்திர சிங் ஆகியோர் மீது சுயேச்சையான சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஹசாரே குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமருக்குக் கடிதம்: ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட சுயேச்சையான சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு கோரி ஹசாரே குழு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, ஏ.கே. கங்குலி, ஏ.பி. ஷா, குல்தீப் சிங், ஜே.எஸ். வர்மா, எம்.என். வெங்கடாசலய்யா ஆகியோரில் எவரேனும் மூவரை தேர்ந்தெடுத்து விசாரணைக் குழுவை அரசு அமைக்கலாம்.
இந்தக் குழு 15 "ஊழல்' அமைச்சர்கள் மீதும் கட்சித் தலைவர்களான மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா ஆகியோர் மீதும் விசாரணை நடத்தட்டும். இந்தக் குழு அண்ணா ஹசாரே குழு மீதும் விசாரணை நடத்தட்டும்.
ஜூலை 24-ம் தேதிவரை நாங்கள் காத்திருப்போம். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஜூலை 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மறுப்பு: ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி, சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மீதும் மற்ற அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி மறுத்தார். அவர் மேலும் கூறியது:
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இவ்வாறு கூறுவது இது முதல் முறையல்ல.
கேஜரிவாலால் நடத்தப்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியை முறையாகக் கையாளவில்லை என்று புகார் கூறி ஹசாரேக்கு கிரண் பேடி கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முதலில் மறுக்கட்டும் என்றார் மணீஷ் திவாரி.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About