திருவனந்தபுரம்: மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தங்கள் நாட்டு கடற்படை வீரர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கான தனது தூதரை இத்தாலி அரசு வாபஸ் பெற்றது. கேரளாவில் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் சுட்டதில் குமரி மீனவர் உட்பட 2 பேர் இறந்தனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலியானோ, ஜிரோன் ஆகிய 2 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் கடந்த 3 மாதமாக திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க இத்தாலி அரசு கடும் முயற்சிகளை எடுத்தது. ஆனால், இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை இத்தாலி அரசு நஷ்டஈடாக வழங்கியதால், கப்பல் நிறுவனம் மீது தொடர்ந்த வழக்குகளை மீனவர்களின் குடும்பத்தினர் வாபஸ் பெற்றனர்.
இதனால், சிறையில் உள்ள வீரர்களை எளிதாக விடுவித்து விடலாம் என இத்தாலி அரசு கருதியது. ஆனால், அதன் பிறகும் இத்தாலி வீரர்கள் விடுதலை ஆவதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து, தங்கள் வீரர்களை சிறையில் அடைக்காமல் விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், வீரர்களை சிறைக்கு வெளியே தங்க வைக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்தது. இந்நிலையில், இத்தாலி வீரர்களுக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 2 வீரர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இத்தாலி அரசு, டெல்லியில் உள்ள தனது நாட்டு தூதரான ஜியாகோமோ சான்பெலிஸை நேற்று அவசரமாக திரும்ப அழைத்து கொண்டது. இத்தாலி அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும், சான்பெலிஸ் உடனடியாக ரோம் புறப்பட்டு சென்றார். இத்தாலி வீரர்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இத்தாலி அரசு தனது தூதரை திரும்ப பெற்றதாக தெரிகிறது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இத்தாலி வீரர்கள் இருவரும் ஜாமீன் கோரி, கொல்லம் மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு செய்தனர். இது நீதிபதி ராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘வீரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் இருவரும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள். தற்போது விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது‘ என்றார். இத்தாலி சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘வீரர்கள் இருவரும் இத்தாலி ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இதை நிராகரித்த நீதிபதி, வீரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
19:14
Tags :
court order
,
fisher man shoot dead
,
italy
,
kerala
,
latest news tamilnadu .tamilan
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments