Showing posts with label court order. Show all posts

Sunday, May 27, 2012

thumbnail

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவரின் அசையா சொத்தில் பங்கு அளிப்பதற்கான சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த 2-ந் தேதியன்று திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இருதரப்பு விருப்பத்துடன் விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த கால அவகாசத்தை ரத்து செய்யும் வகையில், இம் மசோதா கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த மசோதா, பெண்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், விவாகரத்து பெறுவது எளிதாகி விட்டால், பெண்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.

இதனால், மசோதா மீதான விவாதத்துக்கு சல்மான் குர்ஷித் பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவாகரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த பங்கைப் பெற, விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 19, 2012

thumbnail

கேரளாவில் 2 மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கு இத்தாலி கப்பல் ...


திருவனந்தபுரம்: மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தங்கள் நாட்டு கடற்படை வீரர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கான தனது தூதரை இத்தாலி அரசு வாபஸ் பெற்றது. கேரளாவில் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் சுட்டதில் குமரி மீனவர் உட்பட 2 பேர் இறந்தனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலியானோ, ஜிரோன் ஆகிய 2 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் கடந்த 3 மாதமாக திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க இத்தாலி அரசு கடும் முயற்சிகளை எடுத்தது. ஆனால், இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை இத்தாலி அரசு நஷ்டஈடாக வழங்கியதால், கப்பல் நிறுவனம் மீது தொடர்ந்த வழக்குகளை மீனவர்களின் குடும்பத்தினர் வாபஸ் பெற்றனர்.

இதனால், சிறையில் உள்ள வீரர்களை எளிதாக விடுவித்து விடலாம் என இத்தாலி அரசு கருதியது. ஆனால், அதன் பிறகும் இத்தாலி வீரர்கள் விடுதலை ஆவதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து, தங்கள் வீரர்களை சிறையில் அடைக்காமல் விருந்தினர் மாளிகையில் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால்,  வீரர்களை சிறைக்கு வெளியே தங்க வைக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்தது. இந்நிலையில், இத்தாலி வீரர்களுக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில்,  2 வீரர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இத்தாலி அரசு, டெல்லியில் உள்ள தனது நாட்டு தூதரான ஜியாகோமோ சான்பெலிஸை நேற்று அவசரமாக திரும்ப அழைத்து கொண்டது. இத்தாலி அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும், சான்பெலிஸ் உடனடியாக ரோம் புறப்பட்டு சென்றார். இத்தாலி வீரர்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இத்தாலி அரசு தனது தூதரை திரும்ப பெற்றதாக தெரிகிறது.

ஜாமீன் மனு தள்ளுபடி
இத்தாலி வீரர்கள் இருவரும் ஜாமீன் கோரி, கொல்லம் மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு செய்தனர். இது நீதிபதி ராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘வீரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் இருவரும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள். தற்போது விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாது‘ என்றார். இத்தாலி சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘வீரர்கள் இருவரும் இத்தாலி ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இதை நிராகரித்த நீதிபதி, வீரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Thursday, May 17, 2012

thumbnail

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இன்று சென்னையில் அமலுக்கு வந்தது

சென்னை, மே. 17-
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  
 
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  
 
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.   இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
 
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-  
 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
 
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
 
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது.   இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.

About