Monday, May 14, 2012

thumbnail

சத்துணவு குழந்தைகளுக்கு 4 சீருடை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார்.
 
அவர் கூறியதாவது:-
 
குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கும் பணியிலும், அவர்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் பணியிலும் அங்கன்வாடி மையங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில் இணை உணவு, முட்டை, சூடான மதிய உணவு ஆகியவற்றுடன் முன் பருவக் கல்வியும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன.
 
மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோருக்கு இணை உணவும், முதியோர்களுக்கு மதிய உணவும் அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் 31 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அங்கன்வாடி மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மின் விசிறி மற்றும் மின் விளக்கு ஆகியவற்றை பொருத்தவும் நான் சென்ற ஆண்டு ஆணையிட்டேன்.
 
தற்போது தமிழ்நாட்டில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் 16,645 அங்கன்வாடி மையங்களில், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், மாசற்ற சுற்றுச் சூழலை உருவாக்கும் வகையிலும் 'புகையில்லா சமையலறைகள்' அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 37,794 அங்கன்வாடி மையங்களில் 5,000 அங்கன்வாடி மையங்களில் இந்த ஆண்டில் அதாவது 2012-2013-ஆம் ஆண்டில், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன், அதாவது பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, புகையில்லா சூழ்நிலையை உருவாக்கக்கூடிய நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக்கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
 
இந்த முன்னோடித் திட்டம் முதற்கட்டமாக சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில், 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இதேபோன்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வந்த இரண்டு இணை சீருடைகளை நான்கு இணை சீருடைகளாக இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களால் இந்தப் பணியை குறித்த காலத்தில் முடிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டும், இந்த கூட்டுறவு சங்கங்களில் உள்ள மகளிர் அதிக ஊதியம் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும் மகளிர் தையற் கூட்டுறவு சங்கங்களில் 54,000 நவீன தையல் இயந்திரங்களை 54 கோடி ரூபாய் செலவில் வாங்க வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் தொகை மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்படும் என்பதையும், இந்தத் தையல் கூட்டுறவுச் சங்கங்கள் கடனுதவி பெறத்தக்க வகையில் 10 விழுக்காடு அளவிற்கு ஆதார நிதியை அரசு வழங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் தைக்கும் திறன் மூன்று மடங்காக உயர்வதால், இதர நிறுவனங்களிடமிருந்து தைக்கும் வேலை வாய்ப்பினை இவர்கள் பெற்று, அதிக வருவாய் பெற வழி ஏற்படும்.
 
மேலும், மாணவ- மாணவியருக்கு குறித்த காலத்தில் சீருடை வழங்க வழிவகை ஏற்படுவதுடன், சீருடைகளின் தையல் தரம் மேம்பட்டதாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About