Tuesday, May 15, 2012

thumbnail

நேபாள விமான விபத்தில் 15 பேர் சாவு

காத்மாண்டு, மே 14: வடக்கு நேபாளப் பகுதியில் உள்ள மலை மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள். இருவர் பணியாளர்கள். மற்ற இருவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இறந்த இந்தியர்களில் சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவி லதா, கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டாச்சாரியார் எல்.எஸ். சுதர்சனம் ஆகியோர் அடங்குவர்.  இந்த துயரச் சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது.  இது குறித்து நேபாளத் தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தது:  அக்னி ஏர் எனும் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான டோர்னியர் ரக விமானம் ஒன்று பொகாரா நகரத்திலிருந்து புகழ்பெற்ற ஹிந்து புனிதத்தலமான முக்திநாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம், திபெத் எல்லையையொட்டிய தொரோங்லா இமய மலைக் கணவாய் அருகே உள்ள ஜோம்சோம் விமானநிலையத்தில் இறங்க முற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக மலை மீது விமானம் மோதி சிதறி நொறுங்கியது.  விமானத்தில் 21 பேர் இருந்தனர். இவர்களில் 15 பேர் பலியாயினர். இறந்தவர்களில் 11 பேர் இந்திய யாத்ரீகர்கள். இருவர் விமானப் பணியாளர்கள். மற்ற இருவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள்.  அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தவர்களில் 3 பேர் இந்தியர்கள். இவர்களில் 6 மற்றும் 9 வயது சிறுமிகளும் அடங்குவர். இவர்களைத் தவிர, ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் 2 ஊழியர்களும் தப்பித்தனர். அவர்கள் அனைவரும் பொகாரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். தப்பிப் பிழைத்த 3 இந்தியர்களும் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டனர்.  விமானியான பிரபுசரண் பதக், இணை விமானியான ஜே.டி. மகாராஜன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  சம்பவம் நடந்த ஜோம்சோம் விமானநிலையம் தலைநகரிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது; கடல்மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எவரெஸ்ட் சிகரத்தை பார்த்துவிட்டுத் திரும்பிய 19 பேர் விமான விபத்தில் பலியாயினர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.  இந்திய தூதரகம்: விமான விபத்து குறிந்து நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அபூர்வா ஸ்ரீவஸ்தவ் கூறியது:  மிக மோசமான இந்த விபத்தில் தப்பித்த 3 இந்தியர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். உயிர்பிழைத்த 2 சிறுமிகளின் பெற்றோர் கதி என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை. தப்பித்த மூவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். விமானத்தில் பயணம் செய்த ஒரு சிலரின் உறவினர்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். விமானத்தில் பயணித்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்டி வருகிறோம். பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் சில குழப்பங்கள் உள்ளன. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. நேபாள ராணுவத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அவர்கள் மீட்கப்பட்ட உடல்களை காத்மாண்டுக்கு கொண்டுவருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸ்ரீவஸ்தவ் தெரிவித்தார்.  விமான நிறுவன மேலாளர்: அக்னி ஏர் விமான நிறுவன மேலாளரான பிரமோத் பாண்டே, ஜோம்சோம் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவது அத்தனை கடினமானதல்ல. நாங்கள் அனுபவம் மிக்க விமானிகளையே பணியில் அமர்த்தியுள்ளோம். இந்த விமானத்தை செலுத்தியவர் அதிக அனுபவம் கொண்டவர் என்று குறிப்பிட்டார்.  நேபாள செய்தியாளர்: விமான விபத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. அவை அனைத்தும் காத்மாண்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என நேபாளத்தின் ஹிமாலயன் டைம்ஸ் செய்தித்தாளின் நிருபர் ஒருவர் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About