Thursday, May 17, 2012

thumbnail

ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகளின் வேலை நிறுத்தம், நேற்று 10வது நாளாக தொடர்ந்தது-188 கோடி ரூபாய் நஷ்டம்

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகளின் வேலை நிறுத்தம், நேற்று 10வது நாளாக தொடர்ந்தது. 10 நாட்களாக நடக்கும் போராட்டத்தால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, 188 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் கூட்டத்தை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அடுத்த வாரம் கூட்டியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர் இந்தியா விமான பைலட்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று, 10வது நாளாக நீடித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: அவசர கால திட்டத்தின் அடிப்படையில், தற்போது, குறைந்தபட்ச அளவுக்கு மட்டுமே, சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான பல விமான சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. பைலட்டுகள் போராட்டம் காரணமாக, டிக்கெட்டுகள் ரத்து, போயிங்-777 ரக விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, பணிக்கு வந்தும் வேலையில்லாத தொழிலாளர்கள் போன்றவற்றால், தினமும் விமான நிறுவனத்திற்கு, 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மொத்தத்தில், பல வகையிலும், இதுவரை 188 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பயண திட்டம் பாதிப்பு: சர்வதேச வழித்தடங்களுக்கு, ஏ-320, ஏ-321, ஏ-330 ரக விமானங்களை, ஏர் இந்தியா இயக்கி வருகிறது. 17 போயிங்-777 விமானங்களில் எட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. போராட்டம் காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பைலட்டுகளின் வேலை நிறுத்தம், விமானங்கள் ரத்து போன்றவற்றால், நூற்றுக்கணக்கான மக்களின் விடுமுறைக் கால பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பைலட்டுகள் பணிக்கு வரும் வரை, அவர்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. நீக்கப்பட்ட பைலட்டுகளை வேலையில் சேர்ப்பது உட்பட அனைத்து பிரச்னைகளையும் பரிசீலிக்க, அரசு தயாராக உள்ளது. இருந்தாலும், வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விரைவில், வரும் என நம்புகிறோம். இவ்வாறு அதிகாரி கூறினார்.

அடுத்த வாரம் பேச்சு: இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ""ஏர் இந்தியா தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன், அடுத்த வாரம் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தும். அப்போது, பதவி உயர்வு உட்பட, பல பிரச்னைகள் குறித்து பேசப்படும்,'' என்றார். மத்திய அரசு அடுத்த வாரம் நடத்தவுள்ள, ஏர் இந்தியாவின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு, இந்திய பைலட்டுகள் கில்டு (ஐ.பி.ஜி.) அழைக்கப்படுமா என்பது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பேச்சு வார்த்தை குறித்து, இந்திய பைலட்டுகள் கில்டு இணைச் செயலர் தவ்சீப் முக்கதம் மும்பையில் கூறுகையில், "மத்திய அரசு அடுத்த வாரம் நடத்தவுள்ள பேச்சு வார்த்தையில், எங்கள் சங்கம் நிச்சயம் பங்கேற்கும்.

அது வேறு, இது வேறு: ஆனால், இது தொடர்பாக, எங்களுக்கு எந்தவித அழைப்பும் இதுவரை வரவில்லை. தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை என்பது வேறு, எங்கள் போராட்டம் வேறு. எங்களது சங்கத்தைச் சேர்ந்த, 71 பைலட்டுகளை, ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நாங்கள் எப்படி பணிக்கு திரும்ப முடியும்,'' என்றார். ஏர் இந்தியாவில், 13 அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும், 28 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். இதில், போராட்டத்தில் குதித்துள்ள இந்திய பைலட்டுகள் கில்டு சங்கத்தின் அங்கீகாரத்தை, ஒன்பது தினங்களுக்கு முன், மத்திய அரசு ரத்து செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About