Tuesday, May 15, 2012

thumbnail

ஹிந்துக்கள் 500 பேர் புனித யாத்திரை செல்ல மானியம்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, மே 15: ஹிந்துக்கள் மானசரோவர், முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல 500 பேருக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கை:  கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், ஹிந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தேன்.  அதன்படி முதல் கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தேன். இதனையடுத்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.  ஹிந்துக்களில் ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், ஒரே ஒரு முறையாவது சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்க வேண்டும் என்பதும், நேபாள நாட்டில் சாளக்கிராமம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும் விருப்பமாக இருந்து வருகிறது.  அதன் அடிப்படையில், இந்தத் திருத்தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இருப்பினும், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள ஹிந்துக்களுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.  எனவே, இதனைக் கருத்தில் கொண்டு மானசரோவர், முக்திநாத் செல்ல விரும்புவோரின் பயணச் செலவுக்கு மானியம் வழங்கப்படும்.  இந்த அரசு மானியம், மானசரோவர் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 ஹிந்துக்களுக்கும், முக்திநாத் செல்ல 250 ஹிந்துக்களுக்கும் என மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும்.  மானசரோவர் புனிதப் பயணத்துக்கு ஒருவருக்கு ஆகும் மொத்த செலவான ரூ. 1 லட்சத்தில் ரூ. 40 ஆயிரமும், முக்திநாத் புனிதப் பயணத்துக்கு ஒருவருக்கு ஆகும் செலவான ரூ.25 ஆயிரத்தில் ரூ.10 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About