Tuesday, May 22, 2012

thumbnail

பிளஸ் 2 தேர்வு: சுஷ்மிதா முதலிடம்

சென்னை, மே 22: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷ்மிதா 1,189 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  தேர்வு எழுதிய மாணவர்களில் 86.7 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.  
சுஷ்மிதா தமிழில் 194 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 195 மதிப்பெண்ணும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் 200 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.  
அதே பள்ளி மாணவி டி.கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் பி. அசோக்குமார், பாண்டமங்கலம் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.மணிகண்டன் ஆகியோர் 1,200-க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். 
 திருசெங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மகேஸ்வரி, நாமக்கல் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பிரபா சங்கரி ஆகியோர் 1,187 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.  இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள அனைவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.  
இவர்களில் சுஷ்மிதா, டி.கார்த்திகா, பி.பிரபா சங்கரி ஆகிய மாணவிகள் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள். 


  1,190 மதிப்பெண் பெற்றவர்கள்: முதல் பாடமாக தமிழைத் தவிர பிற மொழியை எடுத்த மாணவ, மாணவியரில் புதுச்சேரியைச் சேர்ந்த செயின்ட் ஜோசப் ஆஃப் குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வப்னா, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பவித்ரா ஆகியோர் தலா 1,190 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மாணவிகள் முறையே பிரெஞ்சு, சம்ஸ்கிருதத்தை முதல் பாடமாகத் தேர்வு செய்ததால் அவர்களுக்கு மாநில அளவிலான ரேங்க் கிடைக்கவில்லை.  தமிழ் பாடத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏகேடி அகாதெமி பள்ளியின் மாணவரே இந்த ஆண்டும் முதலிடம் பெற்றுள்ளார். அந்தப் பள்ளியின் பி.முத்துக்குமரன் 200-க்கு 198 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.  மாணவிகள் 89.7 சதவீத தேர்ச்சி: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட, மாணவியரே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவியர் 89 சதவீதத்தினரும், மாணவர்கள் 83.2 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இவர்களில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 916 பேர் மாணவியர். 2 லட்சத்து 91 ஆயிரத்து 678 பேர் மாணவர்கள். 1 லட்சத்து 870 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.  தேர்ச்சியடைந்தோரில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 323 பேர் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.  இதுதவிர, தனித்தேர்வர்களாக சுமார் 67 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.  இயற்பியலில் சரிந்த மதிப்பெண்: இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200-க்கு 200 எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 646 பேராக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 142 ஆக குறைந்துவிட்டது. கணிதப் பாடத்திலும் 200-க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2,656 ஆகக் குறைந்துவிட்டது. 
கடந்த ஆண்டு 2,720 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.  ஆனால், வேதியியல், உயிரியல் பாடங்களில் இந்த ஆண்டு சதமடித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வேதியியலில் 1,444 பேரும் (1,243), உயிரியலில் 620 பேரும் (615) இந்த ஆண்டு சதமடித்துள்ளனர்.  பிற பாடங்களில் சதமடித்த மாணவர்களின் எண்ணிக்கை:  கம்ப்யூட்டர் சயின்ஸ் - 615, தாவரவியல் - 6, விலங்கியல் - 4, வணிகவியல் - 921, கணக்குப் பதிவியல்- 2,518, வணிகக் கணிதம் - 475  இன்றுமுதல் விடைத்தாள் நகல் விண்ணப்பம்: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 23) முதல் வழங்கப்படுகின்றன.  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மே 25) வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் பெற்ற அலுவலகத்திலேயே மே 25 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  விடைத்தாள் நகல் கிடைத்த பிறகு, 5 நாள்களுக்குள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மாணவர்களுக்காக புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் மே 30-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     எஸ்.சுஷ்மிதா  தமிழ் 194  ஆங்கிலம் 195  இயற்பியல் 200  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,189  டி.கார்த்திகா  தமிழ் 197  ஆங்கிலம் 193  இயற்பியல் 198  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,188  பி.அசோக்குமார்  தமிழ் 196  ஆங்கிலம் 192  இயற்பியல் 200  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,188    சி.மணிகண்டன்  தமிழ் 196  ஆங்கிலம் 193  இயற்பியல் 199  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,188    பி.மகேஸ்வரி  தமிழ் 196  ஆங்கிலம் 191  இயற்பியல் 200  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,187  பி.பிரபாசங்கரி  தமிழ் 197  ஆங்கிலம் 194  இயற்பியல் 196  கணிதம் 200  வேதியியல் 200  உயிரியல் 200  மொத்தம் 1,187  

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About