Sunday, May 20, 2012

thumbnail

மம்தாவின் மமதை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் "சிவப்புநிற ஒவ்வாமை' அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும், இருநாள்களுக்கு முன்பு ஒரு டிவி நிகழ்ச்சியில், இந்த "சிவப்பு நிறம்' அவரை ரொம்பவே முகம் சிவக்க வைத்துவிட்டது.
 மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி, மக்களின் கேள்விக்கு மம்தா பானர்ஜி பதில் சொல்வதற்காக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் அரசுக்கு எதிர்ப்பாகவே இருந்தன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஓராண்டு ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ""நீங்கள் எல்லாரும் மாவோயிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்'' என்று கூறி எழுந்து சென்றுவிட்டார் முதல்வர் மம்தா.
 மம்தா பானர்ஜி ஒன்றும் அரசியலுக்குப் புதியவர் அல்ல. இளைஞர் காங்கிரஸில் இருந்து படிப்படியாக முன்னேறி, மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த அனுபவசாலி மம்தா. வருகிறவர்கள் யாருமே கசப்பான கேள்விகளைக் கேட்க மாட்டார்கள் என்று கருதிக்கொள்ளும் அளவுக்கு வெள்ளந்தி மனுஷியா என்ன மேற்கு வங்க முதல்வர்? அவருக்கு எரிச்சலூட்டும் கேள்விகள் பிடிக்காது என்றால், ஏன் இந்த டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சம்மதிக்க வேண்டும்?
 இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்திருந்தவர்களில் பலர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பிரசிடென்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். அண்மையில், கார்ட்டூன் வரைந்து இணையதளத்தில் வெளியிட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கைது விவகாரம் அறிவுஜீவிகள் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் மாணவர்கள் இது தொடர்பாகக் கேள்வி கேட்காமல் இருப்பார்கள் என்று முதல்வர் மம்தா கருதி இருந்தால் அதைவிட முட்டாள்தனம் என்ன இருக்க முடியும்?
 சில மாதங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குடும்பங்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஒரு மணவிழாவில் தனது கட்சிக்காரர்களுக்கு வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தவர் மம்தா பானர்ஜி. ரயில் கவிழ்ந்த போதெல்லாம், மாவோயிஸ்ட்டுகள் தனக்கு எதிராகச் சதி செய்வதாகக் குறிப்பிட்டார். பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த மார்க்ஸ், எங்கல்ஸ் தொடர்பான பாடங்களை நீக்கச் சொன்னார். இவையெல்லாம் மம்தா பானர்ஜி மீதான மரியாதையைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றன.
 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட்டுகள் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சி மீது மேற்கு வங்க மாநில மக்கள் கொண்ட சலிப்பினால்தான் மம்தாவை முதல்வராக்கியுள்ளனர். அதற்காக ஆட்சி பீடத்தில் ஏறிய பிறகு, அவரைக் கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்துவோர் எல்லாரும் கம்யூனிஸ்டுகள் என்று முடிவுகட்டுவது, அவர் அரசியலையும் மக்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
 மேற்கு வங்க மாநிலத்தில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைக் காலம் தொடர்ந்து பதவியில் இருந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியில் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் குடும்பத்தினராகவும் அனுதாபிகளாகவும் இருந்திருப்பார்கள். பள்ளி, கல்லூரிகளிலும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது பிடிப்பு உள்ளவர்கள் நிறைய பேர் பணிக்கு வந்திருப்பார்கள். இப்போது, மக்களின் எதிர்ப்புக் காரணமாக மம்தா முதலமைச்சர் பதவியை அடைந்துவிட்டாலும், அரசு நிர்வாகமும் - அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் - அவர் தலைமையில் இயங்க விருப்பம் கொண்டவர்களாக ஒரே நாளில் மாறிவிட மாட்டார்கள். மனம் ஒட்டாமல்தான் காரியமாற்றுவார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல், ஒரே நாளில் எல்லாமும் மாறிவிட வேண்டும் என்று விரும்பினால் அதை அறியாமை என்று சொல்லாமல் வேறென்னவென்பது?
 உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் கட்சி சார்ந்தவர்களாகவும், அனுதாபிகளாகவும் இருக்கும் நிலைமை தமிழ்நாட்டிலும் உண்டு. பத்தாண்டு திமுக ஆட்சிக்குப் பிறகு மக்களின் பேராதரவுடன் அதிமுக 1977-ல் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் எம்.ஜி.ஆர். இப்போது மம்தா பானர்ஜி சந்திக்கும் அதே பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், மம்தா பானர்ஜியைப் போல அவர் கோபமும் எரிச்சலும் அடையவில்லை. நிர்வாகம் தனது கட்டுக்குள் வரும்படி பார்த்துக் கொண்டார்.
 தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் நிலப்பறிப்பு வழக்கு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க இன்றைய தமிழக முதல்வர் விரும்பினாலும், வழக்குப் பதிவேடுகள் அனைத்திலும் சட்டத்தின் ஓட்டைகள்! ஆட்சி மாறினால், ஒரே மாதத்தில் இந்த வழக்குகள் தள்ளுபடியாகிவிடும். ஊழல் செய்த எந்த அமைச்சர் மீதும், அவர் சார்ந்த துறையின் ஊழல் தொடர்பாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரிகளும் சரி, காவல்துறையினரும் சரி, முன்னாள் ஆட்சியாளர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்ததைப்போல நடிப்பார்கள் என்பது தமிழகமானாலும், மேற்கு வங்கமானாலும் நடைமுறை உண்மை.
 ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால், அது நியாயமானதாக இருந்தாலும்கூட மக்களிடையே செல்வாக்கை இழக்கச் செய்துவிடும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆட்சிபீடத்தின் மீது காட்டும் சினம், மக்கள் குரலாகப் பார்க்கப்படும். ஆட்சிபீடத்தில் இருந்துகொண்டு காட்டும் சினம், நியாயமான சினமாக இருந்தாலும், அதிகார மமதையாகத்தான் பார்க்கப்படும். இதை முதல்வர் மம்தா பானர்ஜி உணர வேண்டும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About