இனறு அன்னையர் தினம். அன்னையைப் போற்றுவோம்.
13.5.12தாய்மையைப் போற்றும் நாளான 'சர்வதேச அன்னையர் தினம்' உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அன்னையரைப் போற்றி கொண்டாடுவோம் என்று இந்த உலகுக்கு அறிவுறுத்தலை வழங்கியவர் அன்னா ஜார்விஸ். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த இவர், திருமணமானவரோ அல்லது பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னையருக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தியே அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது.
தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையும் இவரையே போய்ச்சேரும். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், வருடத்தில் ஏதாவது ஒரு நாளில், எல்லோரும் தங்களது தாயை, அவர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோவ் வில்சன், அன்னையர் தினத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என உறுதி செய்யப்பட்டது.
தனது அன்னையை முன்னோடியாக வைத்து அன்னா ஜார்விஸ் மேற்கொண்ட கடின முயற்சியினால்தான் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் மே மாதம் வரும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு சில நாடுகளில் வேறு சில தினங்களிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் எங்கெங்கோ வாழும் பிள்ளைகள் தங்களது தாயை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடியவர் அன்னா ஜார்விஸ். ஆனால் இன்று வணிக நோக்கத்திற்காக பல உலக தினங்கள் விளம்பரப்படுத்துப்பட்டு அதில் அன்னையர் தினமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமே.
அன்னையை நிற்க வைத்து காலில் விழுந்து வணங்குங்கள். என்ன இது நிற்க வைத்து வணங்குவது? தாய் இறந்த பிறகு அவரது காலடியில் விழுந்து எல்லோரும் வணங்குவர். அதனால் உயிரோடு இருக்கும் போதே அவரை நிற்க வைத்து காலில் விழுந்து வணங்கி அவரை பெருமைப்படுத்துங்கள். அவரது வார்த்தைக்கு நாமும் மதிப்பளித்து, அன்னையைப் போற்றுவோம். பெருமைப்படுத்துவோம்.
05:02
Tags :
mothers day
,
அன்னையர் தினம்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments