Friday, May 18, 2012

thumbnail

பொத்தேரி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் வந்து மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிர் இழந்தனர்.

மே 18 
மதுராந்தகம் :மதுராந்தகம் பைபாஸ் சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், சாலையோர மரத்தில் மோதியது. காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூர் பொத்தேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (37), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (33). நேற்றிரவு ராமமூர்த்தி மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். மூன்று குழந்தைகள் உள்பட 9 பேர் காரில் இருந்தனர். ராமமூர்த்தியின் உறவினரான சுரேஷ் காரை ஓட்டினார். நள்ளிரவு 12 மணியளவில் சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் பைபாஸ் சாலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராமமூர்த்தி தம்பி ஆழ்வார் (35), டிரைவர் சுரேஷ் (30) இருவரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

பின் சீட்டில் இருந்த ராமமூர்த்தி, அவரது மனைவி லட்சுமி (33), மற்றொரு தம்பி குமார் (32), அவரது மனைவி சுபாஷினி (28), ராமமூர்த்தி மகன் ஜெகன் (10), சந்துரு (2), குமார் மகன் ரவிச்சந்திரன் (6) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், விபத்தை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போராடியவர்களை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி, குமார் மனைவி சுபாஷினி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இறந்தவர் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லட்சுமி, குமார், குழந்தைகள் ஜெகன், சந்துரு, ரவிச்சந்திரன் ஆகியோர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சென்னை , திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About