Tuesday, May 15, 2012

thumbnail

ராசாவுக்கு ஜாமீன்-இன்றிரவு 7 மணிக்கு திகார் ஜெயிலில் இருந்து வெளியில் வருவார்

புதுடெல்லி, மே. 15-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட 14 பேரில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா தவிர மற்ற 13 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

இதைத் தொடர்ந்து ஆ.ராசாவும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது ராசாவை விடுவிக்க சி.பி.ஐ. ஆட்சேபம் தெரிவித்தது.

சி.பி.ஐ. வக்கீல் கூறுகையில், ராசா மீதான குற்றச்சாட்டுக்களில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து ரூ. 200 கோடி கை மாறியது பற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராசாவை ஜாமீனில் விடுவித்தால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார். இந்த வழக்கின் போக்கே மாறிவிடும் என்றார். இதற்கு ராசாவின் வக்கீல் ரமேஷ்குப்தா பதில் அளித்தார். அவர் கூறுகையில், ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டு விட்டது. எனவே ஆ.ராசாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

மேலும் கோர்ட்டின் எந்த நிபந்தனையும் அவர் ஏற்க தயாராக உள்ளார் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஒ.பி.சைனி, ஜாமீன் மனு மீதான உத்தரவை 15-ந்தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) தள்ளி வைத்தார்.

அதன்படி இன்று ராசாவின் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்ப்பை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த சுமார் 150 பேர் கோர்ட்டு வளாகத்தில் திரண்டிருந்தனர். காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு ஆ.ராசா வந்தார். அவர் ஜாமீனில் விடுதலையாக கனிமொழி எம்.பி., சாகித்பல்வா, வினோத் கோயங்கா, சித்தார்த்த பெகுரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நீதிபதி சைனி வந்ததும் முதலில் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அந்த விசாரணை முடிந்த பிறகு ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மதியம் 12.30 மணியளவில் நீதிபதி சைனி வெளியிட்டார். ஆ.ராசாவுக்கு ரூ. 25 லட்சம் சொந்த ஜாமீன் வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

ஆ.ராசா டெல்லியிலேயே தங்கி இருக்க வேண்டும். கோர்ட்டில் தகவல் தெரிவித்து முன் அனுமதி பெறாமல் தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிபதி சைனி விதித்துள்ளார்.

கடந்த 15 மாதங்களாக டெல்லி திகார் ஜெயிலில் இருந்து வந்த ராசா கடந்த வாரம்தான் ஜாமீன் கோரி முதன் முதலாக மனு செய்தார். முதல் முயற்சியிலேயே அவருக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜரான ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ஆ. ராசாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி ஜாமீன் வழங்கலாம் என்றார். இதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான 14 பேரும் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளனர்.

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் சி.பி.ஐ. கோர்ட்டு வளாகத்தில் திரண்டிருந்த ராசாவின் உறவினர்களும், தி.மு.க.வினரும் உற்சாகம் அடைந்தனர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி கண்ணீர் மல்க காணப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு என் கணவருக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று பரமேஸ்வரி கூறினார்.

ராசா விடுதலை ஆவதைத் தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் இனிப்புகளும் வினியோகிக்கப்பட்டன. டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்லது. தி.மு.க. என்றென்றும் அவருக்கு துணையாக இருக்கும் என்றார்.

ராசா விடுவிக்கப்பட்டுள்ளதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள கருத்தில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதுடன் 2ஜி ஊழல் வழக்கு முடிந்து விட வில்லை என்று கூறியுள்ளது.

ஆ.ராசாவை ஜாமீனில் விடுவிக்க சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஆ.ராசா இன்றிரவு 7 மணிக்கு திகார் ஜெயிலில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About