லக்னெள, மே 11: உத்தரப் பிரதேசத்தில் முந்தைய மாயாவதி அரசு கொண்டுவந்த 27 திட்டங்களை அகிலேஷ் தலைமையிலான சமாஜவாதி அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அம்பேத்கர், மாயாவதியின் அரசியல் குருவான கான்சிராம் ஆகியோரின் பெயரிலான திட்டங்கள், அரசு ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் அடங்கும். ரூ. 5 லட்சம் வரையிலான அரசு ஒப்பந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முறையே 21 சதவீதம், 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2009-ம் ஆண்டு ஜூன் 30-ல் மாயாவதி அரசு அறிவித்தது. அதன் பிறகு ரூ. 25 லட்சம் வரையிலானபணிகளுக்கு இந்த ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது. அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டால்தான் கட்டுமானப் பணிகள் தரமாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை ரத்து செய்வது என அமைச்சரவை முடிவு செய்ததாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கர் கிராம விகாஸ் யோஜனா என்ற திட்டம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக டாக்டர் ராம் மனோகர் லோகியா சமக்ரா கிராம விகாஸ் யோஜனா என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது தவிர மேலும் 26 திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.4861.72 கோடி மிச்சமாகும். மான்யவார் கான்ஷிராம் நகர்ப்புற ஏழைகள் வீட்டு வசதித் திட்டம், கான்ஷிராம் பசுமை பூங்கா, பாபா சாஹிப் பீமாராவ் அம்பேத்கர் பிரதீக் ஸ்தல், டாக்டர் அம்பேத்கர் நல்கூப் யோஜனா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட பிற முக்கியத் திட்டங்களாகும்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments