Saturday, May 12, 2012

thumbnail

கிரயோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி; உள்நாட்டு தயாரிப்பில் கூடுதல் மைல்கல் !

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அருகே மகேந்திரகிரியில் உள்ள ராக்கெட் ஆய்வு மையத்தில் நடந்த கிரயோஜெனிக் இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இவ்வகை இன்ஜின்களுக்காக பிற நாடுகளை சார்ந்திருந்த நிலை மாறியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஒரு அங்கமான திரவ திட்ட இயக்க மையம் (எல்.பி.எஸ்.சி.,) நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி எல்லையில் மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ளது. ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் இன்ஜின் (கிரயோஜெனிக்) ஆய்வு இங்குதான் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலத்தில் இவ்வகை கிரயோஜெனிக் இன்ஜின்களை நாம் ரஷ்யாவில் இருந்து வாங்கி பயன் பெற்று வந்தோம். இந்நிலையில், கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து பெற அமெரிக்கா பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டதையடுத்து, இந்திய விஞ்ஞானிகள் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, உள்நாட்டிலேயே கிரயோஜெனிக் இன்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று கிரயோஜெனிக் இன்ஜின் சோதனை இன்று நடந்தது. இதில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

நடப்பு ஆண்டு இறுதியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, "கிரெயோஜெனிக் இன்ஜின் ' மூலம், ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 ராக்கெட் ஏவப்பட உள்ளது. அதற்கு முன், இரண்டு பி.எஸ்.எல்.வி., ராக்கெட்களை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ரிசாட்-1 என்ற நுண்ணலை தொலை உணர்வு செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி19 மூலமும், இந்தியா - பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில், சரல் என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி20 ராக்கெட் மூலமும் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் பங்கேற்றார்: செயற்கைகோள்களை எடுத்துச் செல்ல உள்ள ஜி.எஸ்.எல்.வி.,மாக் 3 ராக்கெட்டில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டது. இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மகேந்திரகிரி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த சோதனைக்கு பிறகு சில மாத இடைவெளியில் மீண்டும் ஆயிரம் வினாடிகளுக்கான சோதனையும் இங்கு மேற்கொள்ளப்படும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About