"2ஜி' ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக டில்லி திகார் சிறையிலுள்ள, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா, தனக்கு ஜாமின் வழங்கக் கோரி முதன் முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த அதிரடித் திருப்பத்திற்கு காரணம், ராஜா அமைச்சராக இருந்த போது, தொலைத்தொடர்புத் துறையின் செயலராக இருந்த பெகுராவுக்கு நேற்று ஜாமின் கிடைத்தது. இதையடுத்து, ராஜாவுக்கு இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இவரது மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் பெகுராவிற்கு சுப்ரீம் கோர்ட் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, ராஜா சார்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜாவின் ஜாமின் கோரிக்கை மனுவுக்கு, நாளை மதியம் 2 மணிக்குள் பதிலளிக்குமாறு சி.பி.ஐ.,க்கு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜாவை சி.பி.ஐ., கைது செய்து, டில்லி திகார் சிறையில் அடைத்தது. அதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ராஜா உட்பட 17 பேர் மீது பாட்டியாலா கோர்ட் நீதிபதி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
இதுவரை கேட்கவில்லை:இந்த வழக்கில், ராஜா இது வரை ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. ராஜா மற்றும் பெகுராவைத் தவிர அனைவருக்கும் ஏற்கனவே ஜாமின் தரப்பட்டிருக்கிறது. பெகுராவின் ஜாமின் மனுவிற்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், இதுவரை பெகுராவிற்கு ஜாமின் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு சுப்ரீம்
கோர்ட், பெகுராவிற்கு ஜாமின் வழங்கியது. திருப்பம் :பெகுராவிற்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து, ராஜாவும் ஜாமின் கோர முடிவு செய்தார். இந்த திருப்பத்தையடுத்து, ராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு சர்மா நேற்று மதியம், பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி ஷைனி முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது; ஸ்பெக்ட்ரம்வழக்கில் ராஜா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவையே தவிர, சட்டப்பூர்வமானதல்ல. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனைவரின் மீதும் ஒரே விதமான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., பதிவு செய்திருக்கிறது. எனவே, அவர்கள் அனைவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ராஜாவுக்கும் ஜாமின் வழங்குவதே முறையாகும்.மேலும், பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வரும் குறுக்கு விசாரணையில் இதுவரை 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்டன. தவிர, 1,500 பக்கங்கள் அளவிற்கு ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்களை, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் போதே சி.பி.ஐ.,
பறிமுதல் செய்துவிட்டது. எனவே, சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைப்பதற்கு இனிமேல் எந்த வாய்ப்பும் இல்லை. இதுவரை நடந்த விசாரணைகள் அனைத்திலும் சி.பி.ஐ.,யின் உத்தரவிற்கேற்ப ராஜா நடந்து கொண்டார்.
சட்டத்தை மதிப்பவர்:சட்டத்தை மதித்து நடக்கும் ராஜா, தனக்கு ஜாமின் வழங்கினால் வழக்கு விசாரணைக்கு எந்த விதமான இடைஞ்சலும் செய்ய மாட்டார். ஜாமின் கொடுக்கும் பட்சத்தில், நீதிபதி விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் அவர்ஏற்றுக்கொள்வார். எனவே, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.ராஜாவின் ஜாமின் மனுவை ஏற்ற நீதிபதி அதற்கு சி.பி.ஐ.,யின் நிலைப்பாட்டை கேட்டார். அதற்கு சி.பி.ஐ., வழக்கறிஞர் ஏ.கே.சிங், ராஜாவின் ஜாமின் மனுவிற்கு பதிலளிக்க ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். உடனே ராஜாவின் வழக்கறிஞர், பதில் மனுவை நாளை தாக்கல் செய்தால் நல்லது என்று கூறினார். அதைக் கேட்ட சிங், பெகுராவின் ஜாமின் மனுவிற்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவை பார்த்த பிறகு தான் பதிலளிக்க முடியும். எனவே, தங்களுக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கூறி விட்டார்.இதையடுத்து, ஜாமின் மனுவுக்கான பதிலை மே 11 அதாவது நாளை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய, நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.
22:44
Tags :
2g
,
latest news tamilnadu .tamilan
,
Raja
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments