மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது மத்திய அரசின் நோக்கமல்ல என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என கூறிய பிரதமர் மன்மோகன்சிங்,இது மத்திய மாநில அரசுகளின் மோதலாக இருக்காது என்றும் விளக்கமளித்தார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம், இந்தியாவின் பாதுகாப்புக்கு தூணாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்றுவரும் தீவிரவாத தடுப்பு மையம் குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜெர்மனியில் இதுபோன்ற அமைப்பு இருப்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் எனவேதான் தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மாநில அரசுகள் தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அழைக்கவேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தேவையா இல்லையா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்த மையத்தை அமைக்கும் முயற்சி கடந்த 2004ஆம் ஆண்டே விதைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் சிறப்பு ஆணை மூலம் இந்த தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டாலும், 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகே அந்த அமைப்பை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின் கீழ் செயல்படும் இந்த தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் விதிகளில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இதன்படி இந்த மையம், தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகளை கையாள அனைத்து பாதுகாப்பு மையங்களுடன் இணைந்து செயல்படும். நாட்டின் எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பிடம் இருந்தும் ஆவணங்கள், தகவல்களை பெறுவதற்கு தீவிரவாத தடுப்பு மையத்திற்கு அதிகாரம் உண்டு. மேலும் தேசிய பாதுகாப்புப் படையான கமாண்டோ உள்ளிட்ட எந்த படையாக இருந்தாலும் அதன் உதவியை பெற இந்த மையத்திற்கு அதிகாரம் உள்ளது. இதுதவிர மிகவும் முக்கியமாக, அனைத்து மாநிலங்களிலும் உளவுத்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த மையத்தின் கிளைகள் அமைக்கப்படும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த நேரத்திலும் எங்கும் தாக்குதல் நடத்த இந்த அதிகாரி மற்றும் வீரர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் உளவுத்தகவல்கள் எந்த அளவுக்கு ரகசியமாக இருந்தாலும் அதனை தீவிரவாத தடுப்பு மைய கிளை அதிகாரிக்கு வழங்கப்படவேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள்தான், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது என்பது தீவிரவாத தடுப்பு மையத்தை எதிர்க்கும் முதலமைச்சர்களின் முக்கிய புகார். இதை தொடர்ந்து சில திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று விளக்கம் அளித்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்பு மைய நடவடிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கைகளையும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணப் முகர்ஜிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிகிறது. எனவே புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தொடக்கத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளே குடியரசுத் தலைவர் தொடர்பாகவே வெவ்வேறு கருத்துக்களை கூறி வந்தன. ஆனால், பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அஜித் சிங்கின் ராக்ஷ்ரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே குரலில் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கி்ன்றன. இதனிடையே, குடியரசு்த் தலைவர் தேர்தல் தொடர்பாக நேற்று இடதுசாரிகள் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்க மதசார்பற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார். மதச்சார்பற்ற கருத்தை வெளிப்படுத்தியிருப்பதன் மூலமும் மேற்குவங்கத்தை சேர்ந்தவராக பிரணப் முகர்ஜி இருப்பதாலும், இடதுசாரிகள் பிரணப் முகர்ஜியை ஆதரிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பிரணப் முகர்ஜி்க்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே தற்போதைய சூழ்நிலையில் பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆதரவு பெருகி வருகிறது.
ஐ.ஐ.டி என்று சொல்லப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் இன்று முதல் தங்களது விடைத்தாள்களை இணையதளத்தில் பார்க்கலாம். ஜெ.இ.இ எனப்படும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். சென்னை ஐ.ஐ.டியில் சேர்வதற்காக 71,980 மாணவர்கள் தேர்வு எழுதினர். Optical Response என்று சொல்லப்படும் விடைத்தாட்கள் திருத்தப்பட்டுவிட்ட நிலையில், அவை இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ஐ.ஐ.டி – ஜெ.இ.இ இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன. விடைத்தாள் மதிப்பீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். புகார்கள் ஏற்கப்பட்டு, இம்மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை விடைத்தாட்கள் மறுமதிப்பீடு செய்யப்படும். பிறகு இறுதி செய்ப்பட்ட ரேங்க் பட்டியல் இம்மாதம் 18ம் தேதி வெளியிடப்படும்.
சென்னையில் நடைபெற்ற பரபரப்பான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தா.இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூ பிளஸ்ஸியும், முரளி விஜய்யும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். விஜய் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக விளையாடி 32 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் தோனி டூ பிளஸ்ஸியுடன் இணைந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்த உதவினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெக்கான் அணி தொடக்க ஆட்டக்காரர் பட்டேல் 1 ரன்னில் அவுட் ஆக, தவானும், ஒயிட்டும் இணைந்து விரைவாக ரன்கள் சேகரித்தனர். ஒயிட் அதிகபட்சமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் விளாசி 77 ரன்கள் குவித்தார். ஆனால் அவரது ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. டெக்கான் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள் மாலை 4 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கம்பிர் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணியும், சவுரவ் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இருவரும் மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்துள்ளனர். இதேபோல் இரவு 8 மணிக்கு நடைபெறும் இன்னொரு ஆட்டம் சண்டிகரில் தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோற்றதற்கு இன்றைய போட்டியில் பழிதீர்க்குமா பஞ்சாப் அணி என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐஓபி மற்றும் தமிழக காவல்துறை அணிகள் தகுதி பெற்றுள்ளன. திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னக ரயில்வே அணியும், தமிழக காவல்துறை அணியும் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் தமிழக காவல்துறை அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது.
UPSC நடத்தும் IAS,IPS,IFS உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில், 910 பேர் இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் இடத்தை ஹரியானாவை சேர்ந்த ஷேனா அகர்வாலும், இரண்டாவது இடத்தை ருக்மணி ரியாரும் பிடித்துள்ளார். பிரின்ஸ் தவான் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கோபால சுந்தரராஜ் 5வது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 68 பேர் இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் upsc முதன்மை தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரத்து 984 பேர் எழுத்துத் தேர்வை எழுதி 2 ஆயிரத்து 414 பேர் நேர்காணலில் கலந்துக் கொண்டனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி அடைந்த 910 பேரின் வரிசைப் பட்டியல் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.மேலும், அணையின் உறுதித்தன்மை பற்றிய ஐவர் குழுவின் ஆய்வறிக்கையை தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான குழு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கேரளா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட வேண்டும் என்றும், இருதரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இருதரப்பும் ஏற்க வேண்டும் என தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்டே தெரிவித்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்காக போடப்பட்ட சில துளைகளை மூட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஆனால், அதுகுறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments