Monday, July 09, 2012

thumbnail

PMK picket liquor shops across the state on July 11 / 6172 மதுக்கடைகள் முன்பும் நாளை மறுநாள் (ஜூலை 11-ந்தேதி) காலை 11 மணிக்கு மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப் போடும் அறவழி போராட்டம் நடை பெறவுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் மதுவை ஒழித்து, தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுத்தி வரு கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

32 மாவட்டங்களிலும் மது ஒழிப்பு மாநாடுகளை நடத்தியுள்ளோம். கடந்த 2004-ம் ஆண்டு மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையும், 2008-ல் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தையும் பா.ம.க. வெற்றிகரமாக நடத்தியது. 

பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டத்திலும், செயற்குழு கூட்டத்திலும் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழ்நாட்டில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் நாளை மறுநாள் (ஜூலை 11-ந்தேதி) காலை 11 மணிக்கு மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப் போடும் அறவழி போராட்டம் நடை பெறவுள்ளது.

சென்னை தியாகராய நகர் தெற்கு போக்சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மக்களை குடிகாரர்களாக்கும் மதுக்கடைகளை ஒரு போதும் திறக்க மாட்டேன் என்று கூறிய பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி தலைமையிலும், மது ஒழிப்பை வலியுறுத்தி தமது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி தலைமையிலும், மது விலக்கை உயிர் மூச்சாக கடைபிடித்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. 

மற்ற இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பா.ம.க.வின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப் போராட்டங்களில் பா.ம.க.வின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்பார்கள். மது என்ற அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பதற்காக நடத்தப்படும் இந்த அறவழி போராட்டத்தில் சமய, சமுதாய தலைவர்கள்,தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மது ஒழிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்,சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About