Friday, July 20, 2012

thumbnail

நஷ்டத்தைச் சந்தித்த மைக்ரோசாஃப்ட்: ஆன்லைன் விளம்பரத்தில் சாதித்தது கூகுள்/Microsoft posts first quarterly loss in 26 years



நியூயார்க், ஜூலை 20: தனது 26 ஆண்டு கால வரலாற்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2012-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.2 கோடி அமெரிக்க டாலர் இழப்பை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. அதே சமயம் கூகுள் நிறுவனத்தின் நிகர வருவாய் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.  கடந்த 1986-ம் ஆண்டு பொது நிறுவனமாக மாறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. முதன் முறையாக நிகழாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 49.2 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  ஆன்லைன் விளம்பரச் சந்தையில் கூகுள் நிறுவனத்துடன் போட்டியிடுவதற்காக, "அக்வான்டிக்" நிறுவனத்தை 620 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் மைக்ரோசாஃப்ட் வாங்கியது.  எதிர்பார்த்ததை விட வருவாய் ஈட்டப்பட்ட போதும், கடந்த ஆண்டு ஈட்டிய 590 கோடி அமெரிக்க டாலர் வருவாயோடு ஒப்பிட்டு, இந்த இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது.  இதையடுத்து தன் புதிய இயங்கு தளமான (ஆபரேட்டிங் சிஸ்டம்) "விண்டோஸ் 8" மீது, மைக்ரோசாஃப்ட் பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட உள்ள "விண்டோஸ் 8" இதுவரை வெளியிடப்பட்ட இயங்குதளங்களை விட அதீத சிறப்பம்சங்களைக் கொண்டது. ஒற்றைத் தொடுதல் கட்டுப்பாட்டு குளிகைக் கணினிகளில் (டேப்லெட்) இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது பிரத்யேக குளிகைக் கணினியுடன் இணைத்து வழங்கவும் மைக்ரோ சாஃப்ட் திட்டமிட்டுள்ளது.  சாதித்த கூகுள்: இணைய ஜாம்பவானான கூகுள், இரண்டாம் காலாண்டில் 11 சதவீத நிகர வருவாய் உயர்வை எட்டியுள்ளது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.9 கோடி அமெரிக்க டாலர் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 25.1 கோடி அமெரிக்க டாலர் ஈட்டப்பட்டிருந்தது.  ஆன்லைன் விளம்பரத் துறையில் சாதித்ததே இதற்குக் காரணம். இத்துறையில் 21 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த வருவாய் 35 சதவீதம் உயர்ந்து, 122.1 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.  இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கூகுள் தலைமைச் செயல் அலுவலர் லாரி பேஜ், "மோட்டோரோலா நிறுவனம் கூகுள் குடும்பத்துடன் இணைந்திருப்பதால் இந்த காலாண்டு எங்களுக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. "நெக்யுஸ்7" குளிகைக் கணினி, ஆராவாரம் மிக்க வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About