முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கையின் அம்பணத்தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கம்பீர் 3 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சேவாக்-கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு முறை தப்பிப் பிழைத்த சேவாக், 97 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த ரோஹித் சர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 12-வது சதத்தை நிறைவு செய்தார். கடைசி 5 போட்டிகளில் அவர் அடிக்கும் 4-வது சதம் இது. 113 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார் கோலி.
கடைசிக் கட்டத்தில் ரெய்னா 45 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50, தோனி 29 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தனர். இலங்கைத் தரப்பில் திசாரா பெரெரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை தோல்வி: பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் வேகமாக வெளியேறினாலும், தனி நபராகப் போராடிய சங்ககாரா சதமடித்தார். அவர் 151 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் அதிரடியாக ஆடிய திசாரா பெரெரா 28 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இலங்கையின் தோல்வி தவிர்க்க முடியாததானது.
இந்தியத் தரப்பில் இர்ஃபான் பதான், உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments