தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இன்று நடந்தது. மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதற்காக 1027 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் 78 மையங்களில் 36 ஆயிரம் பேர் தகுதி தேர்வு எழுதினார்கள்.
காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. காலையில் முதல் தாள் தேர்வு 12 மணி வரை நடந்தது. 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை ஆண்களை விட பெண் பட்டதாரிகளே அதிக அளவில் எழுதினார்கள்.
தேர்வு மையங்களுக்கு காலையிலேயே குடும்பத்துடன் வந்து குவிந்தனர். பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகளை தாய் அல்லது தந்தையர்கள் தேர்வு வளாகங்களில் வைத்து கவனித்து கொண்டிருந்தனர்.பல ஆண்கள் குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவித்ததையும் காண முடிந்தது.
தேர்வு மையத்துக்கு தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பலர் 10.15, 10.30 மணி வரை அரக்க பரக்க பதட்டத்துடன் வந்தனர். ஒரு சில தேர்வர்கள் தேர்வு தொடங்கிய பிறகும் வந்தனர். அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.
அரசு பொது தேர்வை விட கடுமையாக இந்த தேர்வு கடைபிடிக்கப்பட்டது. கண்காணிப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், பென்சில், பேப்பர், ஐபேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் அனுமதிக்கவில்லை.
தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு எழுத சென்ற ஆசிரியர்கள் மாணவர்களை விட அதிகமாக தேர்வு பயத்தில் இருந்தனர். பஸ், ரெயில்களில் வந்தபோதும், தேர்வு மைய வளாகங்களிலும் புத்தகங்களை படித்தபடியே இருந்தனர்.
பல தேர்வர்களுக்கு தொலை தூரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். பூந்த மல்லி, கேளம்பாக்கம், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு அறையில் முறைகேடு செய்து பிடிபட்டால் இந்த தேர்வை ரத்து செய்வதோடு அடுத்து 3 ஆண்டுகள் ஆசிரியர் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments