
கடந்த 22ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் வருமாறு:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 22ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு வாரம் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் 5 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். கடந்த 15 நாட்களில் 2வது முறையாக இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவது குறித்து நான் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக மீனவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை படையினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்கள் தங்கள் படகுகளுடன் விரைவில் தமிழகம் திரும்பவும் தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த விஷயம் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி, பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்யவேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும். இவ்விஷயத்தில் இந்தியா தலையிடாவிட்டால், வரும் மாதங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
எனவே இது சம்பந்தமாக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments