Saturday, June 09, 2012

thumbnail

தமிழ்நாடு விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழும்: புதுக்கோட்டை பிரசாரத்தில் ஜெ. பேச்சு

 புதுக்கோட்டை தொகுதி பாலன் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில்  அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சகோதரர் முத்துக்குமரன்  சாலை விபத்தில் அகால மரணமடைந்ததை ஒட்டி தற்போது இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக அன்பு சகோதரர் ஏ.சு. கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் ஒரு பட்டதாரி. 
 
உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். அனைவரிடமும் எளிமையுடனும், அன்புடனும் பழகக் கூடியவர்.  உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கார்த்திக் தொண்டைமானை புதுக்கோட்டை நகர மன்றத் தலைவராக நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள். இப்பொழுது அவரை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளவே உங்களை நாடி இங்கே வந்திருக்கிறேன்.
 
புதுக்கோட்டை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. 1991-ஆம் ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஐந்து சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை நீங்கள் வெற்றி பெறச் செய்து இருக்கிறீர்கள்.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்களின் அமோக ஆதரவுடனும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நான், தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன்.  ஓராண்டில் மகத்தான சாதனைகளை; மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
 
*அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி.
 
*வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம்;
 
* முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1,000 ரூபாயாக அதிகரிப்பு;
 
* ஏழைப் பெண்களின் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் திருமண நிதி உதவி;
 
* படித்த ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் தங்கம் மற்றும் 50,000 ரூபாய் திருமண நிதி உதவி;
 
* முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;
 
* வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம்;
 
* முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;
 
*குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு;
 
*இடைநிற்றலைக் குறைக்கும் நோக்குடன் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சிறப்பு ஊக்கத் தொகை;
 
*பள்ளிக் கல்லூரி மாணவ - மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி;
 
*மாணவ-மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப் பை, கணித உபகரணப்பெட்டி, வண்ண பென்சில்கள் மற்றும் புவியியல் வரை படங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு ஜோடி சீருடை;
 
* இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திட நடவடிக்கை;
 
* விலையில்லா மின் விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம்;
 
* மீன்பிடி தடைக் காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல்;
 
* மீன் பிடிப்பு குறைந்த காலங்களில் வருவாயை ஈடுகட்டும் விதமாக 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்குதல்; என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் உங்கள் அன்புச் சகோதரியின் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  இந்தத் திட்டங்களின் பயன்களை நீங்கள் எல்லாம் இப்போது அனுபவித்துக் கொண்டு வருகிறீர்கள்.
 
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த நில அபகரிப்பாளர்களின் கொட்டம் முழுவதுமாக அடக்கப்பட்டு தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு உள்ளது. இதுவரை 1190 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது  செய்யப்பட்டு; 758 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு; நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.  அனைவரும் வியக்கும் வண்ணம் நாங்கள் சாதனைகளை புரிந்து வருகிறோம். இது மட்டுமல்லாமல், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட புதுக்கோட்டை நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
 
மேலும், புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் சாலை அமைத்தல்; மழை நீர் வடிகால்கள் அமைத்தல்; திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் பணிகள் முதலான பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2011-2012ஆம் ஆண்டில் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1912-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதுக்கோட்டை நகராட்சி, இந்த ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் புதுக்கோட்டை நகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக 50 கோடி ரூபாய் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
மேலும், நூற்றாண்டு விழா நினைவுத் தூண் மற்றும் வளைவுகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓராண்டில் இவ்வளவு சாதனைகளை நாங்கள் புரிந்திருந்தாலும் மின் பற்றாக்குறை விஷயத்தில் நீங்கள் சற்று வருத்தத்தில் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மின்சார உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைமைக்கு காரணம். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டு கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் மந்த கதியில் இருந்த  1000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக முதல் அலகு இந்த ஆண்டு ஜுலை மாதமும்; இரண்டாம் அலகு நவம்பர் மாதமும் தமது உற்பத்தியை துவக்க இருக்கின்றன. 
 
இதனைத் தொடர்ந்து 500 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாம் அலகும் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இதே போன்று, 1,200 மெகாவாட் மின்திறன் கொண்ட வட சென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டு யூனிட்டுகளும்;  600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மூன்றாம் நிலை அனல் மின் நிலையமும் விரைவில் உற்பத்தியை துவக்க உள்ளன.
 
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதன் இரண்டு யூனிட்டுகளும் விரைவில் மின் உற்பத்தியை துவக்க உள்ளன.  இதன் மூலம் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே உள்ள 3,500 மெகாவாட் மின் பற்றாக்குறை முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு தமிழ்நாடு விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் திகழும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 
 
கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன் காரணமாக தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இது தவிர, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையமும் தனது 840 மெகாவாட் முழு மின் உற்பத்தியை தொடங்கி விட்டது. 
 
இதனையடுத்து, வீடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நான்கு மணி நேர மின்வெட்டு மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியவை முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டன. இது மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு 800 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி விரிவுத் திட்டம்; 1,600 மெகாவாட்  திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டம்; 800 மெகாவாட் திறன் கொண்ட தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம்; தற்போதுள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு பதிலாக 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய திட்டம் என 3,860 மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
 
இது தவிர,  1,600 மெகாவாட் மின் திறன் கொண்ட பெல் நிறுவனத்துடன் ஆன உடன்குடி அனல் மின் கூட்டுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில்  8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்.  இவை அனைத்தும் 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும்.
 
தமிழ் நாட்டின் மின் நிலைமையை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன்.  விரைவில் மின் மிகை மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு மீண்டும் பெறும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுக்கோட்டை தொகுதி மக்களின் பிரச்சனைகளைப் பற்றி நான் நன்கு அறிவேன்.
 
*காவிரி கொள்ளிடம் உபரி நீர்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்;
 
*அக்னி ஆறு மற்றும் அம்புலி ஆறு தூர் வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்பட வேண்டும்;
 
*புதுக்கோட்டையைச் சுற்றி, சுற்று வட்டச் சாலை அமைக்கப்பட வேண்டும்;
 
* புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மக்கள் புதுப் பொலிவுடன் வாழ்வதற்கான அனைத்துத் தேவைகளையும், வசதிகளையும் நாங்கள் நிச்சயம் செய்து தருவோம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
"தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்'' என்ற குறிக்கோளுடன்  அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு  இந்த இடைத் தேர்தலில் உங்கள் நல்லாதரவினை நீங்கள் முழுமையாக அளிக்க வேண்டும். புதுக்கோட்டை தொகுதி  வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு உங்களுடைய முழு ஆதரவினை  நிச்சயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.
 
இந்தத் தேர்தலில் ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழக வேட்பாளர் அன்புச் சகோதரர்,  கார்த்திக் தொண்டைமானுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று  உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு. அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன்.  நன்றி, வணக்கம்.'' 
 
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About