Friday, June 08, 2012

thumbnail

தேங்காய் விலை வீழ்ச்சிக்கு கண்டனம்-தென்னை விவசாயிகள் நேற்று பேரணியாக சென்று ரோட்டில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்


3000 தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
பட்டுக்கோட்டை : தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நேற்று பேரணியாக சென்று ரோட்டில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் தேங்காய் உடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட கவுரவ தலைவர் சுப்பையன், மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தனர். பேரணியை மாநில பொருளாளர் பழனிவேல் துவக்கி வைத்தார்.
அறந்தாங்கி ரோடு காந்தி சிலையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பஸ் ஸ்டாண்டை பேரணி சென்றடைந்தது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தென்னை விவசாயிகள் 3,000 பேர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் 3000 தேங்காயை உடைத்து போராட்டம் நடத்தினர்.
தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி பழனிவேல் கூறுகையில், ஒரு தேங்காயை உற்பத்தி செய்ய 8 ரூபாய் ஆகிறது. ஆனால் ஸீ3.50க்கு தான் விற்கிறது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே தமிழக அரசு தேங்காய்க்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
உரித்த முழுதேங்காயை கிலோ ரூ.25 நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை உற்பத்தி செலவு மிக அதிகமாகிவிட்டதால் ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.75 நிர்ணயம் செய்ய வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் கொப்பரை கொள்முதல் அட்டை வழங்க வேண்டும். கொப்பரை கொள்முதல் நிலையங்களை தேவைக்கேற்ப அந்தந்த பகுதியில் திறந்து கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன
தமிழக சந்தை நிலவரப்படி,ஜூன்  மாதம் வரை தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய் வரை இருக்கும் என, வேளாண் பல்கலைக்கழகத்தின் சந்தை தகவல் மையம் தெரிவிக்கிறது. தமிழகத்தில், 3 லட்சத்து 83 ஆயிரத்து 400 ஹெக்டேரில் தேங்காய் விளைச்சல் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டிற்கு 342 கோடி டன் தேங்காய் உற்பத்தியாகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு, தேங்காய் அதிகம் உற்பத்தியாகிறது.


பொள்ளாச்சி, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் தேங்காய் சந்தைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், 4 லட்சம் கொப்பரை உற்பத்தியாகும். தொழிற்சாலைகளுக்கு அதிக தேவை இல்லாததால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. இது தவிர, பாமாயில் எண்ணெய் விலை சரிவு மற்றும் மின்வெட்டால் எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது.


கோடையில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும். அதேசமயம்,தேவை அதிகரிக்காததால், தமிழக சந்தையில் தேங்காய் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பொள்ளாச்சி சந்தையில் ஒரு கிலோ தேங்காய் விலை, 13ல் இருந்து 9 ரூபாயாக குறைந்துள்ளது. அளவை பொறுத்து தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதர சந்தைகளில் தேங்காய் விலை மேலும் குறையும். இது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என, சந்தை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About