Tuesday, June 05, 2012

thumbnail

வானில் ஒரு அரிய காட்சி: வெள்ளிக் கிரக இடைமறிப்பு -நாளை பார்க்கலாம்

நாளை (6-ந்தேதி) சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்கிறது. இதனால் சூரியனில் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும். இதையே வெள்ளி இடைமறிப்பு என்கிறோம்.  இதுபோன்ற நிகழ்வு 105 ஆண்டுகளுக்கு பிறகே நடைபெறும்.

இந்த நிகழ்வினை நமது பகுதியில் சூரியன் உதயம் முதல் 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வினை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது. சூரிய ஒளி வடிகட்டி மூலம் பார்த்தாலும் தெரிவது அபூர்வமே.

ஆனால் சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச்சுவரில் பிடித்தால் சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் நகர்ந்து செல்வதுபோல் தெரியும். இம்முறையை அனைவரும் பின்பற்றி பார்க்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் டெலஸ்கோப் இருந்தால் அதன் மூலம் ஒளியை வெண்திரையில் பிடித்து பார்த்தால் தெளிவாக இந்நிகழ்வை பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் சூரியனை பார்க்கக்கூடாது. அப்போது கண் பாதிக்கப்பட்டு விடும்.

மேலும் இந்நிகழ்வினால் பூமியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எந்த உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. மனிதனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதுகுறித்து ஜோதிடர்கள் கூறும் கருத்துக்களையும், செய்முறைகளையும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. மக்கள் அச்சமோ பீதியோ அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இந்த அரிய நிகழ்வினை பாதுகாப்பான முறையில் பார்த்து ரசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது. இந்நிகழ்வு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காணலாம்.

இந்நிகழ்வை நாளை பொதுமக்கள், மாணவர்கள் பார்க்கும் வகையாக ஆரப்பாளையம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் டெல்ஸ்கோப் மூலம் காலை 8 மணி முதல் 9 மணி வரை பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை வானொலி இந்நிகழ்வினை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்ப உள்ளது. மாவட்டத்தின் பல பள்ளிகளில் இந்நிகழ்வினை அறிவியல் இயக்கம் ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு நடத்திக்காட்ட உள்ளனர். இதன் மூலம் சுமார் 50 பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்நிகழ்வினை செய்முறை மூலம் செய்து காட்டுவர்.

இதற்கென எளிய செய்முறை கருவியினை அறிவியல் இயக்க ஆசிரியர் ஞானசேகரன் வடிவமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார். முனைவர் பேராசிரியர் குமாரசாமி வெள்ளி இடைநகர்வு குறித்த அறிவியல் பின்னணி குறித்து கணினி மூலம் விளக்க உரை ஆற்ற உள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறு விளக்க பிரசுரமும், விளக்க புத்தக்கமும் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு உள்ளன. மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கு.கடசாரி தெரிவித்தார்.

சூரியன் முன்னே வெள்ளியின் உலா மேலும் இதுதொடர்பாக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் டாக்டர் குமாரசாமி கூறியதாவது:-

வெள்ளி கிரகமானது சுக்கிரன், விடிவெள்ளி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பூமியின் அளவில் சற்றே சிறியதாக அமைந்திருந்தாலும் அதன் காற்று மண்டலம் நம் காற்று மண்டலத்தைவிட 93 மடங்கு அடர்த்தியானது.

அதில் 95.5 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு வாயுவாக உள்ளதால் அங்கு சராசரி வெப்பநிலை 460 டிகிரி செல்சியசிற்கும் மேலாக உள்ளது. இந்த வெப்பநிலை சூரியனுக்கு அருகில் அமைந்துள்ள புதன் கிரகத்தைவிட 60 டிகிரி செல்சியஸ் அதிகமானது.

வெள்ளி கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 243 நாட்களாகிறது. ஆனால் அது சூரியனை சுற்றிவர 225 நாட்களே எடுத்துக்கொள்கிறது. வெள்ளி கிரகத்தின் ஒருநாள் அதன் ஒரு வருடத்தைவிட பெரியது.

பூமியில் 2 வருடங்கள் ஆகும்போது வெள்ளியில் 3 நாட்கள்தான் ஆகியிருக்கும். வெள்ளியின் அச்சு 177 டிகிரி சாய்வாக உள்ளதால் அது தலைகீழாக சுற்றுகிறது. இதனால் அங்கு சூரியன் மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்.

வெள்ளி கிரகத்தில் அமைந்துள்ள ஒரு கண்டத்தின் ஒரு பகுதிக்கு ‘லஷ்மி சமவெளி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெள்ளி சூரியன் முன்னே கடந்த செல்லும் நிகழ்ச்சி வீனஸ் டிரான்சிட் வெள்ளி இடைநகர்வு நாளை (6-ந்தேதி) காலையில் நடைபெற போகிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும்.

மீண்டும் இதே நிகழ்ச்சி சுமார் 105 வருடங்களுக்கு பின் 2117-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி தான் நடைபெறும். 2117-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறப்போகும் அந்த நிகழ்வை இன்று பிறந்தவர்களோ, உயிரோடு இருப்பவர்களோ இனி காண வாய்ப்பில்லை.

விண்ணில் நடைபெறும் இந்த அரிதான நிகழ்வினால் பூமிக்கோ, சூரியனுக்கோ, மற்ற கிரகங்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. எல்லோரும் இந்த நிகழ்வை தகுந்த பாதுகாப்புடன் கண்டு மகிழலாம்.

சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகமானது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நாளை (6-6-12) வருகிறது. அப்போது பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளி கிரகமானது தன்னைவிட 100 மடங்கிற்கும் சற்று அதிகமான விட்டத்தையுடைய சூரியனை கடந்து செல்வதை ஒரு கருப்பு புள்ளி சூரியனை கடந்து செல்வது போல காணலாம். இதனையே வெள்ளி இடைநகர்வு, வெள்ளி கடத்தல், வெள்ளி நகர்வு, வெள்ளி உலா, வெள்ளி இடைக்கடத்தல், வெள்ளி மறைப்பு என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு வெள்ளி கிரகம் சூரியன் முன் கடந்து செல்ல சுமார் 7 மணி நேரம் ஆகும். வெறும் கண்ணால் இதனை பார்ப்பது கடினம். ஏனெனில் வெள்ளியானது. சூரியனின் அளவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளதால் வெள்ளி மிகச்சிறிய புள்ளியாகத்தான் தெரியும். தொலைநோக்கியின் உதவியுடன்தான் பார்க்க முடியும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About