தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிக வரி அதிகாரி, சப்-ரிஜிஸ்திரார், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் ஆய்வாளர் போன்ற சார்நிலை பதவிகள் குருப்-2 தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
தற்போது, ஊரக வளர்ச்சித்துறை, பத்திர பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் நேரடி உதவியாளர் பணி இடமும் இதன்கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்கண்ட பதவிகளில் 7 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது.
பட்டப் படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 9 லட்சம் பட்டதாரிகள் எழுதினார்கள். அவர்களில் கணிசமானோர் முதுநிலை பட்டதாரிகள், எம்.பில். மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தேர்வு நடந்து முடிந்து 6 மாதத்திற்குள் முடிவு வெளியிடப்பட்டுவிடும்.
ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக, டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர் கே.செல்லமுத்து மற்றும் உறுப்பினர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதாலும், குரூப்-2 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை செல்லமுத்து ராஜினாமா செய்தார். புதிய தலைவராக ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பணிநியமனம் தொடர்பான பணிகள் தொடங்கின. புதிய பணிநியமனங்களுக்கு அறிவிப்புகள் வெளியாயின. பழைய தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு 9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 7 ஆயிரம் காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு இருப்பதால் பலரும் வெற்றிவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். குரூப்-2 தேர்வு முடிவு குறித்து பேசிய டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், 'குரூப்-2 தேர்வு முடிவு தயார்நிலையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தேர்வு முடிவு வெளியிடப்படும்' என்று தெரிவித்தார். தேர்வு முடிவு வெளியிடப்படும் பட்சத்தில், முடிவுகளை சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக அறிவிப்பு பலகையிலும், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
மொத்த காலி இடங்கள் 7 ஆயிரம் உள்ளன. நேர்முகத்தேர்வை பொறுத்தவரையில் ஒரு காலி இடத்திற்கு 2 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இந்த குரூப்-2 எழுத்துத்தேர்வில் 14 ஆயிரம் பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 30 மார்க்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments