Tuesday, June 12, 2012

thumbnail

புதுக்கோட்டையில் 73.43% வாக்குப் பதிவு-வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 15)


புதுக்கோட்டை, ஜூன் 12: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் 73.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின. காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பு அடைந்தது. ஆனாலும், கடந்த தேர்தலைவிட (78.89%) வாக்கு சதவீதம் குறைவாகும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 15) எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் காலை 11 மணிக்குள்ளாக முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கே.பி.என்.சீனிவாசனும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் இறங்கினர். சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மந்தமும், விறுவிறுப்பும்...வேட்பாளர் எண்ணிக்கை 20 ஆக இருந்ததால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொகுதி முழுவதும் மொத்தம் 224 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப் பதிவை ஆன்-லைன் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தேர்தல் அலுவலரும் நேரடியாக கண்காணித்தனர். மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 37 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் மிகவும் குறைவான வாக்குப் பதிவே நடந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9.7 சதவீத வாக்குகளே பதிவாகின. அதன்பின்பு நண்பகல் வரை வாக்குப்பதிவில் விறுவிறுப்பு ஏற்படவில்லை. 12 மணி வரை 32.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஆனால், மாலையில் வாக்குப் பதிவில் விறுவிறுப்பு காணப்பட்டது. மாலை 2 மணிக்கு 51 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், 5 மணிக்கு 73.43 சதவீதமாக இருந்தது.
கடந்த தேர்தலை விட குறைவு: கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் 78.89 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால், இடைத் தேர்தலில் அதை விட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது. மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரங்களும், காலை 11 மணிக்குள்ளாக முழுமையான முடிவுகளும் தெரியவரும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About