ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்
தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் ஜூலை 2-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 4-ம் தேதியாகும். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறும். போட்டி இருப்பின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 22-ம் தேதி நடைபெறும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முறை: முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை புது தில்லியில் உள்ள தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளரை ஆதரித்து குறைந்தபட்சம் 50 முன்மொழிவோர், 50 வழிமொழிவோர் மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர் ரூ. 15 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
தேர்தல் அதிகாரி நியமனம்: குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் விவேக் கே. அக்னிஹோத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அளவில் உதவி தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவர். மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் பணிகளைப் பார்வையிட்டு உதவித் தேர்தல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
வாக்களிக்கும் இடங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் புது தில்லியிலும்; மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாள்களுக்கு முன்பாக அனுமதி பெற்று மாநிலத் தலைநகரில் வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் மாநில சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
18:19
Tags :
Indian president election date
,
latest tamilnadu news
,
president election
,
result date
,
தலைமைத் தேர்தல் ஆணையர்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments