Saturday, June 30, 2012

thumbnail

Chennai Welcomes Rain !!! சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்


சென்னை, ஜூன் 30: தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும்.
 சனிக்கிழமை பதிவான மழை அளவு (காலை 8.30 நிலவரம்):
 நீலகிரி மாவட்டம் தேவாலா - 3 செ.மீ., வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் - 2 செ.மீ., உதகமண்டலம் - 1 செ.மீ.
 சென்னையில் சனிக்கிழமை மாலை சில இடங்களில் மழை பெய்தது.
thumbnail

Chief Minister J Jayalalithaa on Friday ordered building of flyovers and subways at an estimated cost of `231.68 crore.- பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: சென்னை பல்லாவரம், வேளச்சேரி மற்றும் கொளத்தூரில், 231.68 கோடி ரூபாயில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப, சாலைக் கட்டமைப்பில் தேவையான மேம்பாடுகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.231.68 கோடியில் மேம்பாலங்கள்: இதன் ஒரு பகுதியாக, சென்னை, ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து, 80.74 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் மற்றும் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகின்றன. சென்னை, வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில், 98.22 கோடி ரூபாய் மதிப்பில், தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படுகிறது. சென்னை உள்வட்டச் சாலையில், கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப்பகுதியில், 52.72 கோடி ரூபாயில் பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில், மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடை பாதை அமைத்தல் என, 231.68 கோடி ரூபாயில், மேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சாலை விரிவாக்கம்: சென்னை நகரில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கப்படுவதன் காரணமாகவும், சென்னை விமான நிலையம் அருகே அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை விமான நிலையத்திற்கு அருகில் ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு கிலோ மீட்டர் வரை, 1.75 கோடி ரூபாய் செலவில் சாலையை அகலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thumbnail

Engineering admission rank list published today-பொறியியல் ரேங்க் பட்டியல் : அண்ணா பல்கலை வெளியீடு,பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இ.தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்

சென்னை, ஜூன் 30 : 
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை வெளியிட்டது.1,80,071 பேர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் ரேங்க் பட்டியல் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ,   http://www.annauniv.edu/tnea2012/tnea2012rank.html வில் வெளியிடப்பட்டுள்ளது.  மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால், அவர்களது ரேங்க் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.  கடந்த ஆண்டை விட சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு பங்கேற்கின்றனர்.  மொத்தம் 504 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 417 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.  பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறும். விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டிற்கு ஜூலை 5-ம் தேதியும், தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 7 முதல் 11 வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 12-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.  பி.ஆர்க். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூலை 22-ம் தேதி தனியாக கலந்தாய்வு நடைபெறும்
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ரேங்க் பட்டியலை உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் இன்று வெளியிட்டார்.  இந்தப் பட்டியலில் மொத்தம் 32 மாணவ, மாணவியர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண்ணை 88 மாணவர்கள் பெற்றிருந்தனர்.  ரேங்க் பட்டியலை வெளியிட்ட பிறகு, நிருபர்களிடம் டி.எஸ். ஸ்ரீதர் கூறியது:  இந்த ஆண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது. பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,006 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.  இதையடுத்து, 1 லட்சத்து 75 ஆயிரத்து 65 பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களாக உள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வில் முதல் 10 ரேங்க் பெற்ற மாணவர்கள் விவரம்   

1. இ.தேவபிரசாத் - தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.    
2. கே.சிவகுமார் - வேலூர்.    
3. ஆர்.கெளதம் - திருச்சி.   
4. பி.அசோக்குமார் - கோவை.  
5. எஸ்.ஐஸ்வர்யா - நாமக்கல்.    
6. என்.சரவணன் - திருச்சி.    
7. ஆஷிஷ் ராஜேஷ் - சென்னை. 
8. வி.எஸ்.பெர்மியோ - நாகர்கோயில்.   
9. எஸ்.அஷ்வின் குமார் - கோவை.  
10. பி.சரண்குமார் - பரமக்குடி.   

 இந்த மாணவர்கள் அனைவரும் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், 4-வது விருப்பப் பாடம் (உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகியப் பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிறந்த தேதியின் அடிப்படையிலும் இவர்கள் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.  பிறந்த தேதியில் மூத்தவர்களுக்கு ரேங்க் பட்டி்யலில் முன்னுரிமை வழங்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருந்தால், ரேண்டம் அண் அடிப்படையில் ரேங்க் வழங்கப்படும். ரேண்டம் எண்ணில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவர்களில் 32 பேர் 200க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 27, 2012

thumbnail

Metropolitan Transport Corporation bus fell off the city's arterial Anna flyover today around 2 p.m. சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த நகர பேருந்து:

சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழ‌ே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

42 பேர் காயம்: இதில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பžஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பிரசாந்த், கண்டக்டர் ஹேமகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக பஸ்சி்ல் பயணித்தவர்களை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர். 
ஓட்டுநர் பேருந்தை இயக்கும் போது செல்போனில் பேசியபடி இருந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக எதிரே வந்த பேருந்தில் உள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து  பார்த்தவர்கள் கூறியதாவது, விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் செல்போனில் பேசியபடியே பேருந்தை திருப்பியதை நாங்கள் கண்டோம்.காதில் செல்போனை வைத்துக்கொண்டு ஸ்டேரிங்கை திருப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் சீட் கழன்று விட்டது. இதனால் நிலைதடுமாறிய ஓட்டுநர், பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச்சுவற்றின் மீது மோதி கீழே விழுந்ததென எதிர்தரப்பில் உள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.
thumbnail

Jayalalithaa files defamation complaint against "Junior Vikatan" -ஜூனியர் விகடன் மீது ஜெ வழக்கு

சென்னை: முதல்‌வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்க‌த்துட‌‌ன் செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் எ‌ன்று அரசு வழ‌க்க‌றிஞ‌ர் செ‌ன்னை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக சென்னை மாவட்ட முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மாநகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்கிறேன். வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன், 24.6.2012 தேதியிட்ட இதழில், 'யாகப்புகையில் போயஸ் கார்டன்; அதிகார பயம்... பரிகார நிஜம்...'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

'போயஸ் கார்டன் மற்றும் பையனூரில் 11 மணி நேரம் யாகம் நடக்க உள்ளது. இந்த யாகம் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலம் சிறப்பாக வேண்டும். எதிரிகளின் பலம் குறையவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது'' என்று எழுதப்பட்டுள்ளது.

செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் பொய்யானது. அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிக ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வருக்கு இப்படி ஒரு யாகம் நடத்த அவசியமில்லை. ஆனால் யாகம் நடத்தப்போவதாக அட்டை படத்தில் முதல்வ‌ரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாக உள்ளது. எனவே ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதுவறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Tuesday, June 26, 2012

thumbnail

Tamil Nadu medical counseling-2012, topper in medical cut-off ,எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது


சென்னை, ஜூன் 26- எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. 16 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மார்க் எடுத்துள்ளார்கள். மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல்: திருச்சி மாணவன் முதலிடம்

 எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலில்  திருச்சியை சேர்ந்த ஆர்.கவுதம் SKV Higher Secondary School  மாணவன் முதலிடம் பெற்றார். பல்லடத்தை சேர்ந்த S.சுஷ்மிதா(Plus Two State topper of the same school) 2வது இடத்தையும், தி.நகரை சேர்ந்த ஆசிஸ் ராஜேஸ் 3வது இடமும் பிடித்தனர். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி முதல் துவங்குகிறது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளங்களில் பார்க்கலாம். 



தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல் லூரிகள் உள்ளன. இதில் 1,696 எம்.பி. பி.எஸ். இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி இருக்கிறது. இதில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட் டிற்கு 838 எம்.பி.பி.எஸ். சீட்டுகளும், 18 பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 898 பி.டி.எஸ். இடங்களும் கிடைக்கும். இந்த இடங்களும் கலந்தாய்வு மூலமாக நிரப்பப் படும்.
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 28,275 மாணவ-மாண விகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 398 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டன. 27,877 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் கடந்த 20ஆம் தேதி ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ, பல்மருத் துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத் துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தரவரிசைப் பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மார்க் பெற்ற 10 மாணவ-மாணவிகளின் பட்டியலையும் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரிக்கு இந்த ஆண்டு கூடுதலாக 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து உள்ளன. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூ ரிக்கு 50 சீட்டுகள் கிடைக்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து உத்தேச கடிதம் வந்துவிட்டது. அடுத்ததாக அனுமதி கடிதம் வர வேண்டும்.
இதேபோல், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கவுன்சில் குழுவினர் 3 முறை ஆய்வுசெய்துவிட்டு சென்றிருக் கிறார்கள். அந்த கல்லூரியில் 100 இடங்களுக்கு அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறோம். அடுத்த மாதம் (ஜூலை) 15ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
தற்போது மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்கும். முதல் நாளில், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். 6ஆம் தேதி முதல் 10 நாளைக்கு பொது கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு நாள் குறித்து சம்பந்தப் பட்ட மாணவ-மாணவிகளுக்கு அழைப் புக்கடிதம் அனுப்பப்படும். ஒருவேளை அழைப்புக்கடிதம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட கட் ஆப் மார்க் உள்ள மாண வர்கள் அதற்குரிய நாளில் கலந்தாய்விற்கு நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம். எனவே, கலந்தாய்விற்கு விடுபட்டு விடு வோமோ என்று எந்த மாணவ-மாணவியும் அச்சப்படத் தேவையில்லை. கலந்தாய்வு விவரங்களை சுகாதாரத்துறையின் இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
அரசு கல்லூரிகளில் 15 சதவீத இடங் கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்று விடும். அந்த இடங்களில் ஏற்படும் காலி இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய வற்றை நிரப்புவதற்கான 2ஆவது கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் தெரிவிக்கப் படும். முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாண வர்களுக்கு வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் மாணவர்களிடம் இருந்து அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் கண்டிப்பாக சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- இவ்வாறு அமைச்சர் வி.எஸ்.விஜய் கூறினார்.

மாணவிகளே அதிகம்

மருத்துவ படிப்புக்கு 28,275 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18,061 பேர் மாணவிகள். 9,816 பேர் மாணவர்கள். மாணவர்களைக் காட் டிலும் 2 மடங்கு அதிகமாக மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவர் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக இருப்பதன் இதன்மூலம் தெரிகிறது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளி டம் இருந்து அதிக விண்ணப்பங்கள் (11,883) வந்துள்ளன. பழங்குடியினத்தைச் சேர்ந்த 194 மாணவ-மாணவிகளும் மருத்துவ படிப்புக்கு விண்ணப் பித்துள்ளனர். மொத்த விண்ணப்பதாரர் களில் 10 ஆயிரத்து 475 பேர் குடும்பத்தில் முதல்முறையாக கல்லூரி படிப்புக்கு அடியெடுத்து வைக்க உள் ளனர். அதாவது அவர்கள் முதல் தலை முறை பட்டதாரிகள்.

Sunday, June 24, 2012

Saturday, June 23, 2012

thumbnail

Kavingar kannadasan birthday,கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்

முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை

மாவட்டம், சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தன

வணிகர் மரபில் பிறந்தார். தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்

பாடலாசிரியர், கவிஞர் ஆவார். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000க்கும்

மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை,

முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது

பெற்றவர்.

கவிஞர் கண்ணதாசன்
இன்று எங்கள்
திருவிழாக் கவிஞனுக்குப் பிறந்தநாள்...


தமிழ்த்தாய்க்கு
மெட்டில் சமைத்து
தட்டில் பரிமாறியவன் நீ- இசைத்
தட்டில் பரிமறியவன் நீ

உனது காதல் பாடல்களைக் கேட்டால்
காற்று
நதியில் குதித்துக் கும்மாளமிடுகிறது...
சோகப் பாடல்களைக் கேட்டால்
பூக்களில்
முகம் புதைத்து அழுகிறது...

ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும்
உன் பாடல்களின் எண்ணிக்கையை வைத்துத்தான்
காற்றின் ஈரப்பதம்
கணக்கிடப்படுகிறது...

-பழநிபாரதி
http://youtu.be/ZC6dRqDmxTQ 
thumbnail

Child Mahi remains in bore well after 72 hours :Still searching,ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுமியை மீட்கும் பணி தீவிரம்

ஹரியானாவில் 70 அடி துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். அவரை மீட்கும் பணி இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹரியானா மாநிலம் குர்கன் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் என்பவரது மகள் மகி, இரு தினங்களுக்கு முன் தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளன்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார்.
சிறுமி சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சம அளவில் குழி தோண்டப்பட்டு மீட்கும் பணி நடந்து வருகிறது. எனினும் புதிதாக தோண்டப்பட்ட குழியையும், ஆழ்துளை கிணற்றையும் இணைக்க தோண்டப்படும் குழியின் பாதையில் பாறைகள் இருப்பதால் பணிகள் தாமதப்படுகின்றன.
அதுமட்டும் இன்றி குழிக்குள் கடுமையான வெப்பம் நிலவுவதால் ராணுவ வீரர்களால் 10 நிமிடங்களுக்கு மேல் அதில் நின்று தோண்டும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிறுமி மகி-க்கு குழாய் மூலம் ஆக்சிஜன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றை தோண்டியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த ரொதேஷ் தயால் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
thumbnail

Tamilnadu TNPSC Group IV Exam அரசுத் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கான (குரூப் 4) தேர்வு ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது

அரசுத் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்களுக்கான (குரூப் 4) தேர்வு ஜூலை 7ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 10,793 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு சுமார் 12,50,000  விண்ணப்பங்கள வரப்பட்டுள்ளன.  மேற்கண்ட 9 மாவட்டங்களில் மட்டும் 40% பேர் விண்ணப்பபித்துள்ளனர்.

கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வுக்குப் பிறகு இந்த தேர்வுக்குத்தான் அதிகளவில பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ளவர்களில் 47 சேதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

219 தாலுக்காக்களில் உள்ள துணை மையங்களில் 50,000 அறைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். வெளிப்படையாக, நியாயமாக இந்த தேர்வு நடத்தப்பயடும். அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் தேர்வுகளை ஆட்சியர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் முறைகேடுகள் ஏதும் இன்றி தேர்வு நடத்தப்படும். அப்படி தேர்வில் யாரேனும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த மையங்களில் கீழ்த்தளங்களில் தேர்வு அறை அமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)
thumbnail

RANDOM NUMBER OF ANNA UNIVERSITY ON MONDAY (25TH JUNE 2012) பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 1.80 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) நாளை ஒதுக்கப்படுகிறது.

சென்னை, ஜுன் 24  பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 1.80 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) நாளை (ஜூன் 25) காலை ஒதுக்கப்படுகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர், உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஜுன் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் வெளியிடப்படுகிறது.

ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றிருந்தால், ரேங்க் பட்டியலில் அத்தகையோரை வரிசைப்படுத்த முதலில் கணித பாடத்தின் மதிப்பெண் ஒப்பிடப்படும்; கணிதத்தில் சமமான மதிப்பெண் இருந்தால், இயற்பியல் பாட மதிப்பெண் ஒப்பிடப்படும்; இரண்டு பாடங்களிலும் சமமான மதிப்பெண் இருக்கும் நிலையில், 4-வது விருப்பப் பாடத்தில் (கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது உயிரியல்) மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமான மதிப்பெண்ணை மாணவர்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியின் அடிப்படையில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் நிலையில், ரேண்டம் எண்ணில் உயர் நிலையில் உள்ள எண் கணக்கில் கொள்ளப்பட்டு ரேங்க் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி. ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
thumbnail

UGC NET exam on Today( 24th of June 2012)-கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) நாடு முழுவதும் இன்று (ஜுன் 24) நடைபெறுகிறது.

சென்னை, ஜுன் 24 பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) நாடு முழுவதும் இன்று (ஜுன் 24) நடைபெறுகிறது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் தேர்வு முதல்முறையாக அப்ஜெக்டிவ்-டைப் முறையில் நடைபெறுகிறது. இதுவரை கட்டுரை வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டன. அதேபோல், தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கும் முறையும் இந்தத் தேர்விலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு தாள்களில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 வரை இந்தத் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.

பிற்பகலில் மூன்றாம் தாளுக்கான தேர்வு நடைபெறும். மொத்தம் 75 வினாக்கள் இடம்பெற்றுள்ள இந்தத் தாளுக்கான தேர்வு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். (டிஎன்எஸ்)
thumbnail

தமிழகம் முழுவதும் இன்று 24ஆம் தேதி 32 மாவட்டங்களில் உள்ள மையங்களில் காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று  24ஆம் தேதி  32 மாவட்டங்களில் உள்ள மையங்களில்  காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது .

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் ஏற்பட்டுள்ள 13,320 காலிப்பணி இடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு, வருகிற 24ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள மையங்களில் இந்த எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வு எழுதுவதற்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 425 ஆண் விண்ணப்பதாரர்களும், 32 ஆயிரத்து 390 பெண் விண்ணப்பதாரர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
எழுத்து தேர்விற்கான அனுமதி சான்றிதழ் தகுதி உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சீருடைப்பணியாளர் தேர்வாணைய குழுமத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியான சான்றிதழ்கள், நகல்களை இணைக்காத மற்றும் குறைபாடுகளுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான எழுத்து தேர்வு அனுமதி சான்றிதழ், எழுத்து தேர்வு நடப்பதற்கு 5 நாட்கள் முன்பு வரையில் கிடைக்கப்பெறாவிட்டால், அதுபற்றி கவலைப்படத் தேவைஇல்லை. தேர்வாணைய இணையதள முகவரியில் அனுமதி சான்றிதழின் நகலை பிரிண்ட் எடுத்து, அதில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டி, `ஏ' அல்லது `பி' பிரிவு அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்று, மேலும் விண்ணப்பபடிவ எண், விண்ணப்பத்தை அனுப்பியதற்கான ஆதாரங்களை எழுத்து தேர்வு மய்ய கண்காணிப்பாளரிடம் காண்பித்து, எழுத்து தேர்வை எழுதலாம். - இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 21, 2012

thumbnail

சுரங்க உரிமம் வழங்க லஞ்சம்: எடியூரப்பா, மகன்கள், மருமகனுக்கு முன்ஜாமீன்


கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது சவுத்வெஸ்ட் நிறுவனத்துக்கு சுரங்க உரிமம் வழங்க ரூபாய் 20 கோடி லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா மற்றும் அவருடைய மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, அவரது மருமகன் சோகன்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

எடியூரப்பா குடும்பத்தினர் மீதான இந்த சுரங்க முறைகேடு வழக்கை சி.பி.ஐ போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி, சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் எடியூரப்பா உள்ளிட்ட 4 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எடியூரப்பாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, எடியூரப்பா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

எடியூரப்பாவின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எடியூரப்பாவுக்கும் அவரது 2 மகன்கள் மற்றும் மருமகனுக்கு முன்ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.
thumbnail

கவர்னர் ரோசய்யாவிற்கு ஆந்திர கோர்ட் சம்மன்

 அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு அளித்ததாகவும், அதனால் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் தமிழக கவர்னர் ரோசைய்யாவிற்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த ரோசைய்யா, தனக்கு இதுவரை எந்த சம்மனும் கோர்ட் மூலம் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதற்கு சட்டப்படி பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
thumbnail

ஜனாதிபதி தேர்தல்: தந்தையை தொடர்ந்து அகதா சங்மாவும் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுகிறார்

புதுடெல்லி, ஜூன்.21-  
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
 
எனவே சங்மா தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. சங்மா வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. எனவே சங்மா தேசியவாத காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியியை நேற்று ராஜினாமா செய்தார்.
 
சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அகதா அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிப்பார் என இன்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அகதா கலந்து கொள்ளவில்லை. 'தவிர்க்க இயலாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை’ என கட்சி தலைவர் சரத்பவாருக்கு சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.
 
எனவே அகதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. அகதா விரைவில், தனது தந்தைக்கு ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது 29 வயதாகும் அகதா, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர்தான் இந்தியாவின் மிக இள வயது எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது.
கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், அணையின் விளைவாய் பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும் எனவும் ஜெயலலிதா கூறுகிறார்.
அட்டப்பாடி நீர்ப்பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே 4.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையினைக் கட்ட திட்டமிடுகிறது.
காவிரி நடுவர் மன்றம் முன்பும் 4.5 டி.எம்.சி அளவு நீரை அட்டப்பாடி திட்டத்திற்காக கேரளா கோரியிருந்தது.
ஆனால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடிக்காக 2..87 டி.எம்.சி அளவுதான் நீர் ஒதுக்கமுடியும் எனக்கூறிவிட்டது.
நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து கேரளாவும், கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்திருக்கின்றன.
அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, கேரளா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மீறி சிறுவாணியில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
எனவே, மத்திய அரசு கேரளம் அவ்வாறு அணை கட்டக்கூடாது என அறிவுறுத்தவேண்டும், மத்திய நீர் ஆணையம் அவ்வாறு அணை கட்ட அனுமதியளிக்கக்கூடாது எனவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக நேற்று புதன்கிழமை, அணை கட்டும் பணியின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவென அட்டப்பாடி சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சித்தூர் என்ற பகுதி அருகே பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
பின்னர் கேரள போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்துவந்து அதிகாரிகளை மீட்டு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பிவைத்தனர்.

Wednesday, June 20, 2012

thumbnail

வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது எதிரொலி: 10 பஸ்கள் உடைப்பு


சேலம், 
 
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் இருக்கும் குடிசைக்கு தீவைத்து, சூறையாடப்பபட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், சேலம்  மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் பனமரத்துப்பட்டி ராஜா, தாதை கார்த்தி, கறிக்கடை பெருமாள் உள்பட பலர் கைது  செய்யப்பட்டு  சேலம் சிறையில்  அடைக்கப்பட்டனர். பனமரத்துப்பட்டி ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவந்தனர். அங்கம்மாள்  காலனி பிரச்சினையில்  கைது செய்யப்பட்ட  வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அனைவர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் வீரபாண்டிஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி பிறப்பித்தார். இதற்கான உத்தரவை நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீசார்   வேலூர் சென்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் 5 ரோட்டில்  உள்ள பிரிமியர் ரோலர் மில் இடத்தை அபகரித்ததாகவும், கூட்டுறவு சொசைட்டி நிலத்தை பினாமி மூலம்  குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அபகரித்ததாகவும், சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த  பாலமோகன்ராஜ் நிலத்தை அபகரித்ததாகவும், சேலம் கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டியதாகவும் வழக்குகள் இருந்தது. 
 
இப்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது  குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது  குண்டர்   சட்டம் பாய்ந்ததால் அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால்  அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
இருப்பினும் சேலம் 3 ரோடு பகுதியில் 2 பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுபோல் சேலம் குழந்தை இயேசு பேராலயம் பகுதி, காந்தி  ஸ்டேடியம் பகுதி, புதிய பஸ்நிலையம் அருகில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் 8 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சேலம் அருகில் உள்ள மல்லூர் பகுதியிலும் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
நேற்று இரவு எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி எடப்பாடி பஸ்நிலையம் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இவரைப்போல் சேலம் மாவட்டம்  முழுவதும்
10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது  விசாரித்து வருகிறார்கள். சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தில் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.
 
புதிய பஸ் நிலையம், பழைய  பஸ் நிலையம், ஜங்சன் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நின்று கண்காணிக்கிறார்கள். சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்களில் போலீசார் பாதுகாப்புக்கு சென்றும் வந்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகம் மீது உள்ள வழக்குகள் விவரம்:-
 
1. அங்கம்மாள் காலனி நிலத்தை  ஆக்கிரமித்ததாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
2. சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்தது உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு.
3. தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை ஆக்கிரமித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு.
4. கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக  8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
5. அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி தொடர்பாக 16 பிரிவுகளின் கீழ் வழக்கு.
6. அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பலுடன் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, கூட்டு சதிசெய்ததாக வழக்கு.       

Monday, June 18, 2012

thumbnail

10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்கள்.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள். 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவி எஸ். சுஷ்மிதா-க்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவி டி. கார்த்திகாமாணவர்கள் பி. அசோக் குமார், சி. மணிகண்டன் ஆகிய மூன்று மாணவ, மாணவிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற பி. மகேஸ்வரி, எஸ். பிரபா சங்கரி ஆகிய இரண்டு மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 6 மாணவ மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள். 



மேலும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பி. ஸ்ரீநாத்-க்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகள் .எம். நந்தினி, கே.என். மகாலஷ்மி, ஸ்வாதி சென்னியப்பன், என். அகிலா, மாணவர்கள் எஸ். ஜென்கின்ஸ் காட்பிரே, டி. கவின், ஆகிய ஆறு 2 மாணவ, மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகள் எஸ். ஸ்மிதா, கே. சூர்யா, ஆர். தாரணி, டி. வினுமிதா, கே. ஷர்மிளா, பி.கே. பூஜாஸ்ரீ, பி. அம்ரிதா, ராஜேஸ்வரி, மாணவர்கள் எஸ்.கே. அபிஷேக், எம். ஸ்ரீதரா, . ஜஸ்டின் சேவியர் ஆகிய பதினொரு மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு என 18 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டியதுடன், பரிசுப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
thumbnail

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு 19ஆ‌ம் தே‌தி ஹால் டிக்கெட்

பிளஸ்2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்தமாணவர்களுக்கு உடனடி தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுகள் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம்தேதி வரை வழங்கப்படு‌கிறது எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், பிளஸ் 2 தேர்வில் பெயிலான மாணவ-மாணவிகள் ஒரு வருடத்தை வீணாக கழிக்கக்கூடாது. திறமை இருந்தால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதற்காக தமிழக அரசு பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி ூன் 22ஆ‌ம் தேதி முதல் ூலை 4ஆ‌ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வை பள்ளிக்கூட மாணவர்களாக, மாணவிகளாக எழுதி பெயிலானவர்கள், எழுதாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ஒரு காப்பி வைத்துக்கொண்டு அசலை முதல் நாள் தேர்வு எழுதும்போது தேர்வு மையத்தில் ஒப்படைக்கவேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மார்க்குக்கு குறைவாக தேர்ச்சி பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத்தேர்வும் எழுதவேண்டும்.

செய்முறை மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்யவேண்டிய தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தேர்வுகளை செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள் எ‌ன்று வசு‌ந்தராதே‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.
thumbnail

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளி வைப்பு




ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 23-8-2010-க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், `ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள், பி.எட். படித்து பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளனர். பிளஸ்-2 படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ பெற்று இடைநிலை ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தகுதியை சோதிப்பதற்காக இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவேண்டும் என்றும், அவ்வாறு அந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "23-8-2010-ந் தேதிக்கு பிறகு அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் அதன் தேர்ச்சி சதவீதம் 60 என்றும், இந்த தேர்ச்சியை அவர்கள் 5 வருடத்திற்குள் பெறவேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், "பணி நியமனம் செய்யப்படாதவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் முதலில் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர் அதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் அறிவித்தது. தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்'' என்றும் கூறியது.

இந்தநிலையில், "தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு உரிய பணி நியமனம் தொடர்பான பணி 23-8-2010-ம் தேதிக்கு முன்பே தொடங்கி இருந்தால் அத்தகைய ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத்தேவை இல்லை'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி கூறியதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு ஒரே நேரத்தில் தயார் செய்வது கஷ்டமாக உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் இடையே இடைவெளி போதுமானதாக இல்லை. எனவே ஆசிரியர் தகுதி தேர்வை தள்ளிப் போடவேண்டும் என்று ஏராளமானவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. அந்த தேதி வேலை நாள் ஆக இருப்பதால் அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து பெரிய அளவில் பல சந்தேகங்கள் கிளம்பின. அதாவது 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை தேர்ந்து எடுக்க எழுத்து தேர்வு எழுதுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் 23-8-2010-ந் தேதிக்கு முன்பு இருந்தால் அவர்கள் தகுதி தேர்வை எழுத வேண்டாம்.

அதுபோல வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் 23-8-2010-ந் தேதிக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பாக நடைபெற்று இருந்தால் அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத் தேவையில்லை.






ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தகுதியாக இருந்தால் அவர்கள் தேர்வை எழுதலாம். அந்த நம்பர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
thumbnail

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. உடனடித் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வருக்கு, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். அனைத்து தனித் தேர்வர்களுக்கும், 20, 21 தேதிகளில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும். ஏப்ரலில் நடந்த தேர்வை எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவியர், படித்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்'டுகளை பெறலாம். ஏற்கனவே, தனித்தேர்வராக எழுதியவர்களுக்கு, கல்வி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மையத்தில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்.மெட்ரிக் தனித் தேர்வர், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களை எழுதினால், தலா, 100 ரூபாய் வீதம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆங்கிலோ இந்தியன் மாணவராக இருந்தால், கூடுதலாக, தலா, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
thumbnail

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை

சென்னை:இந்திய மருத்துவ கவுன்சிலின், (எம்.சி.ஐ.,) அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின்கீழ் வரும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு, வரும் ஜூலை 5ம் தேதி துவங்க உள்ளது. முறையான உள்கட்டமைப்பு வசதி, போதிய பேராசிரியர்கள் இல்லாததோடு, எம்.சி.ஐ.,யின் ஆய்வின் போது, வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போலி அடையாள அட்டை வழங்கியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள், எம்.சி.ஐ.,யின் அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மட்டும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் வருவதால், இக்கல்லூரி வரும் பொது கலந்தாய்வில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விளக்கம் தர யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறும்போது, ""தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருக்கிறதா அல்லது நடவடிக்கை என்ன என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை,'' எனத் தெரிவித்தனர்.
thumbnail

பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.

தாம்பரம் : பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த, பெருங்களத்தூர் மேம்பாலத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
கடும் நெரிசல்
பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. தினசரி ஒன்றரை லட்சம் வாகனங்கள், இவற்றின் வழியாக பல இடங்களுக்குச் சென்று வருகின்றன.
இந்த ரயில்வே கேட்டுகளை மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், "பீக் அவரில்' கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று, கோரிக்கை விடப்பட்டது.
இரண்டு முறை
இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில், 76 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, முதல் ரயில்வே கேட்டில் மேம்பாலமும், இரண்டாவது கேட்டில் இலகு ரக வாகன சுரங்கப்பாலமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அப்படிச் செய்தால், ஒன்றோடு ஒன்று மோதும் நிலைமை ஏற்படும் என்பதால், திட்டம் கைவிடப்பட்டது. பின், இரண்டு ரயில்வே கேட்டுகளுக்கு இடையே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணி பிரச்னை காரணமாக, அத்திட்டமும் கைவிடப்பட்டது.
வரைபடம் தயார்
இந்நிலையில், தற்போது இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
எப்படி அமைகிறது?
தாம்பரம் மேம்பால வடிவமைப்பிலேயே, பெருங்களத்தூர் மேம்பாலமும் அமைகிறது.
முதல் ரயில்வே கேட் வழியாக நெடுங்குன்றம் ஜி.எஸ்.டி., சீனிவாச ராகவன் சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலமும், இரண்டாவது ரயில்வே கேட்டில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்படுகிறது.
ரவுண்டானா மட்டுமே சற்று வித்தியாசமாக, அனைத்து லாரிகளும் எளிதாக திரும்பும் வகையில், லூப் வடிவில் அமையவுள்ளது.
69 பில்லர்கள்
நிலம் கையகப்படுத்தும் பணி, முழுவதும் முடிந்து விட்டது. மொத்தம் 96 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், கட்டட உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு, கட்டடங்கள் இடிக்கப்படும்.
ஜி.எஸ்.டி., சாலையின், கிழக்கு பகுதியில் 22 பில்லர்கள்; மேற்கு பகுதியில் 24 பில்லர்கள்; நெடுங்குன்றம் சாலையில் 14 பில்லர்கள்; சீனிவாச ராகவன் சாலையில் 9 பில்லர்கள் என மொத்தம் 69 பில்லர்கள் அமையவுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது.
விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன.
15 மாதங்களில் இப்பணி முடிக்கப்படும். இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,' என்றார்.
புறநகரில் மூன்று இடங்களில் மேம்பாலம்
புறநகரில் போக்குவரத்து வசதிக்காக, மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மடிப்பாக்கம் பகுதியில், மவுன்ட் மேடவாக்கம் தெற்கு உள்வட்ட சாலைகள் சந்திக்கும் இடத்தில் சுரங்கப்பாலம். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில், மவுன்ட் பூந்தமல்லி, சென்னை பெங்களூரு, பூந்தல்லி குன்றத்தூர் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். கீழ்க்கட்டளையில், மவுன்ட் மேடவாக்கம், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். மேடவாக்கம் சந்திப்பில் ஒரு மேம்பாலம். இதற்கான, முதல்கட்ட ஆய்வு பணி முடிந்துவிட்டது.

Sunday, June 17, 2012

thumbnail

ஜனாதிபதி தேர்தல்: அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் பிரணாப் முகர்ஜி வெற்றியை பாதிக்கும்


ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய கட்சி பலத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அப்துல் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட ஓட்டபோட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசிய முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே எந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுபோடுகிறார்கள் என்பது தெரியாது. இதைவைத்து அப்துல் கலாமுக்கு ஆதரவாக கட்சிமாறி ஓட்டபோட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
அப்துல் கலாமுக்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியிலும் மரியாதை உள்ளது. அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதால் அவரை பலரும் ஆதரிக்க தயாராக உள்ளனர். எனவே கட்சி கட்டுப்பாட்டையும் மீறி அவருக்கு ஆதரவாக ஓட்டு போட்டால் பிரணாப் முகர்ஜிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
பாராளுமன்றம்- சட்டமன்றத்தில் நடக்கும் மற்ற விஷயங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடும் போது கட்சி கொறடாவின் உத்தரவை ஏற்று ஓட்டுபோட வேண்டும். அதை மீறினால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்த முறை பொருந்தாது. எனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுபோடலாம்.
1969-ம் ஆண்டு ஜாகீர் உசேன் மரணத்தை அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவி ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆனால் பிரதமர் இந்திராகாந்தி வி.வி.கிரியை தனியாக நிறுத்தி வெற்றி பெற வைத்தார். இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.
காங்கிரசுக்கு இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைபடி சஞ்சீவிரெட்டிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் கட்சிமாறி வி.வி.கிரிக்கு ஓட்டுபோட்டதால் அவர் வெற்றிபெற்று விட்டார். அதிகார பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவிரெட்டி தோல்வி அடைந்தார்.
அப்துல்கலாம் நிறுத்தப்பட்டால் மட்டுமே மாற்று கட்சியினர் அவருக்கு ஆதராவக ஓட்டுபோட வாய்ப்புள்ளது. வேறு யாரையாவது நிறுத்தினால் மாற்று கட்சி ஓட்டுகள் விழுவதற்கு வாய்ப்பு இல்லை.

Friday, June 15, 2012

thumbnail

புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி -தேமுதிக 30,500 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி 4,495 வாக்குகளும் பெற்றன

புதுக்கோட்டை, ஜூன் 15: புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரைவிட 71,498 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.  எனினும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டார்.  இந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த 12-ம் தேதி இங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.  அதிமுக சார்பில் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் என்.ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் என்.சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் 17 பேர் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.  இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 1,43,277 வாக்குகள் பதிவாகின (73.48 சதவீதம்). ஆண்கள் 69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் வாக்களித்தனர். 49 ஓ பிரிவை 47 பேர் பயன்படுத்தினர்.  இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான 108 வாக்குகளில் அதிமுக 97, தேமுதிக 2 வாக்குகள் பெற்றன. 9 வாக்குகள் செல்லாதவை.  இதைத் தொடர்ந்து, 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தொடக்கம் முதல் இறுதி சுற்றுவரை அதிமுகவே முன்னிலை வகித்தது.  வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 1,01,998 வாக்குகளும், தேமுதிக 30,500 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி 4,495 வாக்குகளும் பெற்றன. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வி. கலைஅரசி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.முத்துமாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானிடம் வழங்கினார்.

About