Thursday, March 07, 2013

thumbnail

உண்மை நின்றிட வேண்டும்

இன்னொரு ஊழல். இம்முறையும் பல கோடி ரூபாய்கள். வானிலை அறிக்கை, தினப்பலன் போல ஒவ்வொருநாளும் ஊழல் குறித்த செய்திகள் வருவதால், இந்த ஊழல் இடியாகத் தலையில் இறங்கவில்லை.

 ஆனால்-
 நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடையது என்பதனாலேயே அயல் நாடுகளிடமிருந்து நாம் வாங்கும் ஆயுதங்கள், தளவாடங்கள், விமானங்கள் குறித்த தகவல்களும், அது தொடர்பான பேரங்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஆனால், அரசியல்வாதிகளும் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளும் அதையே ஆயுதங்கள் வாங்கும்போது, லஞ்சம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
  அறுபத்தி ஆறு கோடி ரூபாய் லஞ்சமாகக் கை மாறியது என்ற குற்றச்சாட்டிற்குள்ளான போபர்ஸ் பீரங்கி பேரம் நடந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. நேருவை விடப் பிரம்மாண்டமான வெற்றியைத் தேடித் தந்த ராஜீவ் காந்தியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிகிற அளவிற்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டு அது. என்றாலும் அதன் பின் ராணுவத்திற்குப் பொருட்கள் வாங்குவதில் ஊழல் ஓந்து விடவில்லை. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
 பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, முடிந்தால் மூடி மறைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


பன்னிரெண்டு ஆகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக நாம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த ஃபின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த நிறுவனத்தின்  உயர் அதிகாரிகள் கடந்த பல மாதங்களாகவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். அதைக் குறித்து இத்தாலிய ஊடகங்களிலும் சர்வதேச நாளிதழ்களிலும் பல மாதங்களுக்கு முன்னரே செய்திகள் வெளிவந்தன.
 ஆனால், இந்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வந்தது. நடவடிக்கை எடுக்கப் போதுமான அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என தட்டிக் கழித்து வந்தது.
 இந்த விஷயத்தில் இத்தாலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்திய அரசின் அணுகுமுறையையும் ஒப்பு நோக்குவது தவிர்க்க இயலாததாகிறது. இந்தப் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர், சில மாதங்களுக்கு முன் விசாரணை நடக்கவிருக்கிறது எனச் செய்தி கசிந்ததும், தன்னுடைய கணினியில் இருந்த தகவல்களையெல்லாம் அழித்து விட்டார். முக்கியமான ஆவணங்களை தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டு, மறைத்து விட்டார். ஆனால், விசாரணை அதிகாரிகள் கணினியின் வன்வட்டை(ஹார்டு டிஸ்க்)யும், அதையடுத்து மறைக்கப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதையடுத்தே அந்த நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்கள் திகைப்பை ஏற்படுத்துகின்றன என்கிறது இத்தாலி அரசு.
 இத்தாலி அரசு ஹெலிகாப்டர் நிறுவனரைக் கைது செய்த பின், வேறு வழியில்லாமல் இந்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை சி.பி.. வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது உண்மைகளைக் கண்டறியவா அல்லது மூடி மறைக்கவா என்ற சந்தேகம் எழுகிறது. சி.பி.. ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படியெல்லாம் குழப்பிக் கொண்டிருக்கிறது, குற்றம் சாட்டப்பட்டவர்களோடு வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர் குலாவிக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போபர்ஸ் விசாரணையை அது எப்படி சோதப்பியது என்பது வரலாறு.
  அவற்றைப் போல இதுவும் ஆகிவிடக் கூடாது. மத்திய அரசுக்கு நிஜமாகவே அக்கறை இருக்குமானால், அது, லஞ்சம் பெற்றவர்கள் யார், பணம் எங்கே யார் யாருக்குச் சென்றது என்ற தகவல்களை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அதன் விளைவுகளை அரசியல் ரீதியாக அது சந்திக்க நேரிடும்.
  இன்று பாதுகாப்பு அமைச்சராக உள்ள .கே.அந்தோணி, நீண்டகாலமாக அரசியலில் இருப்பவர். ஆனால், நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர். நேர்மையானவர் என்பவர் தன்னளவில் நாணயமாக இருப்பது மட்டுமல்ல, தவறு செய்பவர்களுக்கு துணை போகாமல் இருப்பதும்தான்.

About