Monday, June 18, 2012

thumbnail

பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.

தாம்பரம் : பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த, பெருங்களத்தூர் மேம்பாலத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
கடும் நெரிசல்
பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. தினசரி ஒன்றரை லட்சம் வாகனங்கள், இவற்றின் வழியாக பல இடங்களுக்குச் சென்று வருகின்றன.
இந்த ரயில்வே கேட்டுகளை மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், "பீக் அவரில்' கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று, கோரிக்கை விடப்பட்டது.
இரண்டு முறை
இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில், 76 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, முதல் ரயில்வே கேட்டில் மேம்பாலமும், இரண்டாவது கேட்டில் இலகு ரக வாகன சுரங்கப்பாலமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அப்படிச் செய்தால், ஒன்றோடு ஒன்று மோதும் நிலைமை ஏற்படும் என்பதால், திட்டம் கைவிடப்பட்டது. பின், இரண்டு ரயில்வே கேட்டுகளுக்கு இடையே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணி பிரச்னை காரணமாக, அத்திட்டமும் கைவிடப்பட்டது.
வரைபடம் தயார்
இந்நிலையில், தற்போது இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
எப்படி அமைகிறது?
தாம்பரம் மேம்பால வடிவமைப்பிலேயே, பெருங்களத்தூர் மேம்பாலமும் அமைகிறது.
முதல் ரயில்வே கேட் வழியாக நெடுங்குன்றம் ஜி.எஸ்.டி., சீனிவாச ராகவன் சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலமும், இரண்டாவது ரயில்வே கேட்டில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்படுகிறது.
ரவுண்டானா மட்டுமே சற்று வித்தியாசமாக, அனைத்து லாரிகளும் எளிதாக திரும்பும் வகையில், லூப் வடிவில் அமையவுள்ளது.
69 பில்லர்கள்
நிலம் கையகப்படுத்தும் பணி, முழுவதும் முடிந்து விட்டது. மொத்தம் 96 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், கட்டட உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு, கட்டடங்கள் இடிக்கப்படும்.
ஜி.எஸ்.டி., சாலையின், கிழக்கு பகுதியில் 22 பில்லர்கள்; மேற்கு பகுதியில் 24 பில்லர்கள்; நெடுங்குன்றம் சாலையில் 14 பில்லர்கள்; சீனிவாச ராகவன் சாலையில் 9 பில்லர்கள் என மொத்தம் 69 பில்லர்கள் அமையவுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது.
விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன.
15 மாதங்களில் இப்பணி முடிக்கப்படும். இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,' என்றார்.
புறநகரில் மூன்று இடங்களில் மேம்பாலம்
புறநகரில் போக்குவரத்து வசதிக்காக, மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மடிப்பாக்கம் பகுதியில், மவுன்ட் மேடவாக்கம் தெற்கு உள்வட்ட சாலைகள் சந்திக்கும் இடத்தில் சுரங்கப்பாலம். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில், மவுன்ட் பூந்தமல்லி, சென்னை பெங்களூரு, பூந்தல்லி குன்றத்தூர் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். கீழ்க்கட்டளையில், மவுன்ட் மேடவாக்கம், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். மேடவாக்கம் சந்திப்பில் ஒரு மேம்பாலம். இதற்கான, முதல்கட்ட ஆய்வு பணி முடிந்துவிட்டது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About