Friday, June 15, 2012

thumbnail

புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி -தேமுதிக 30,500 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி 4,495 வாக்குகளும் பெற்றன

புதுக்கோட்டை, ஜூன் 15: புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரைவிட 71,498 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.  எனினும், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டார்.  இந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த 12-ம் தேதி இங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.  அதிமுக சார்பில் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் என்.ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் என்.சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் 17 பேர் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.  இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 1,43,277 வாக்குகள் பதிவாகின (73.48 சதவீதம்). ஆண்கள் 69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் வாக்களித்தனர். 49 ஓ பிரிவை 47 பேர் பயன்படுத்தினர்.  இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான 108 வாக்குகளில் அதிமுக 97, தேமுதிக 2 வாக்குகள் பெற்றன. 9 வாக்குகள் செல்லாதவை.  இதைத் தொடர்ந்து, 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தொடக்கம் முதல் இறுதி சுற்றுவரை அதிமுகவே முன்னிலை வகித்தது.  வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 1,01,998 வாக்குகளும், தேமுதிக 30,500 வாக்குகளும், இந்திய ஜனநாயக கட்சி 4,495 வாக்குகளும் பெற்றன. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வி. கலைஅரசி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.முத்துமாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானிடம் வழங்கினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About