Wednesday, September 25, 2013

thumbnail

பிஜேபி இளம் தாமரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்

திருச்சி:பிஜேபி இளம் தாமரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி நாளை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். தீவிரவாத அமைப்புகள் மிரட்டலை தொடர்ந்து திருச்சியில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
.
திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் இளம் தாமரை மாநாடு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநில முதல் மந்திரியும், பிஜேபி  கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி நாளை மாலை 3 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

வரவேற்பு முடிந்த பின்னர் ஜெயில் கார்னர், ரெயில்வே குடியிருப்பு வழியாக மோடி மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் மோடி பேசுகிறார். மாநாட்டில் மோடி பேசி முடித்த பின்னர் இரவு 7 மணி அளவில் அதே தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி ஆகியோர் பேசுவதற்காக பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் 130 அடி நீளம், 50 அடி அகலத்தில்
திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேடையின் பின்புறம் டெல்லி செங்கோட்டை போன்று வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர மாநாட்டின் நுழைவு வாயில் பகுதியில் இந்தியா கேட் போன்ற அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.மாநாட்டு மைதானத்தில் சுமார் 75 ஆயிரம் பேர் அமருவதற்காக நாற்காலிகள் போடப்பட உள்ளன. மேலும் மாநாடு நடைபெற உள்ள ஜி கார்னர் மைதானம், திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாநாட்டு திடல், புதுக்கோட்டை மெயின்ரோடு, டி.வி.எஸ். டோல்கேட் ஆகிய இடங்களில் மோடியை வரவேற்று பிரமாண்ட கட் அவுட்கள், பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் கொடி, தோரணங்களும் அமைக்கப்பட்டு திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய பிரமுகரான நரேந்திர மோடி தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், மோடி திருச்சி வருகையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.10 அமைப்புகள் மோடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மாநாட்டு மேடை, திருச்சி விமான நிலையம், மோடி மாநாட்டுக்கு வரும் பாதை ஆகிய இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

About