Monday, June 18, 2012

thumbnail

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளி வைப்பு




ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 23-8-2010-க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், `ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள், பி.எட். படித்து பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளனர். பிளஸ்-2 படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ பெற்று இடைநிலை ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தகுதியை சோதிப்பதற்காக இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவேண்டும் என்றும், அவ்வாறு அந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "23-8-2010-ந் தேதிக்கு பிறகு அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் அதன் தேர்ச்சி சதவீதம் 60 என்றும், இந்த தேர்ச்சியை அவர்கள் 5 வருடத்திற்குள் பெறவேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், "பணி நியமனம் செய்யப்படாதவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் முதலில் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர் அதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் அறிவித்தது. தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்'' என்றும் கூறியது.

இந்தநிலையில், "தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு உரிய பணி நியமனம் தொடர்பான பணி 23-8-2010-ம் தேதிக்கு முன்பே தொடங்கி இருந்தால் அத்தகைய ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத்தேவை இல்லை'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி கூறியதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு ஒரே நேரத்தில் தயார் செய்வது கஷ்டமாக உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் இடையே இடைவெளி போதுமானதாக இல்லை. எனவே ஆசிரியர் தகுதி தேர்வை தள்ளிப் போடவேண்டும் என்று ஏராளமானவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. அந்த தேதி வேலை நாள் ஆக இருப்பதால் அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து பெரிய அளவில் பல சந்தேகங்கள் கிளம்பின. அதாவது 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை தேர்ந்து எடுக்க எழுத்து தேர்வு எழுதுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் 23-8-2010-ந் தேதிக்கு முன்பு இருந்தால் அவர்கள் தகுதி தேர்வை எழுத வேண்டாம்.

அதுபோல வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் 23-8-2010-ந் தேதிக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பாக நடைபெற்று இருந்தால் அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத் தேவையில்லை.






ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தகுதியாக இருந்தால் அவர்கள் தேர்வை எழுதலாம். அந்த நம்பர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About