Thursday, June 21, 2012

thumbnail

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை: பிரதமருக்கு ஜெ. கடிதம்

முல்லைப் பெரியாற்றை அடுத்து கேரளாவுடன் இன்னொரு முனையிலும் தமிழகத்திற்குப் பிரச்சினை துவங்கிவிட்டது.
கேரள அரசு சிறுவாணியாற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டவிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாகவும் அவ்வாறு அணை ஏதும் கட்டப்பட்டால் கோவை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், அணையின் விளைவாய் பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும் எனவும் ஜெயலலிதா கூறுகிறார்.
அட்டப்பாடி நீர்ப்பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே 4.5 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையினைக் கட்ட திட்டமிடுகிறது.
காவிரி நடுவர் மன்றம் முன்பும் 4.5 டி.எம்.சி அளவு நீரை அட்டப்பாடி திட்டத்திற்காக கேரளா கோரியிருந்தது.
ஆனால் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடிக்காக 2..87 டி.எம்.சி அளவுதான் நீர் ஒதுக்கமுடியும் எனக்கூறிவிட்டது.
நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து கேரளாவும், கர்நாடகமும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்திருக்கின்றன.
அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, கேரளா நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மீறி சிறுவாணியில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.
எனவே, மத்திய அரசு கேரளம் அவ்வாறு அணை கட்டக்கூடாது என அறிவுறுத்தவேண்டும், மத்திய நீர் ஆணையம் அவ்வாறு அணை கட்ட அனுமதியளிக்கக்கூடாது எனவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக நேற்று புதன்கிழமை, அணை கட்டும் பணியின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவென அட்டப்பாடி சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சித்தூர் என்ற பகுதி அருகே பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
பின்னர் கேரள போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்துவந்து அதிகாரிகளை மீட்டு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பிவைத்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About