Monday, June 18, 2012

thumbnail

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை

சென்னை:இந்திய மருத்துவ கவுன்சிலின், (எம்.சி.ஐ.,) அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின்கீழ் வரும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு, வரும் ஜூலை 5ம் தேதி துவங்க உள்ளது. முறையான உள்கட்டமைப்பு வசதி, போதிய பேராசிரியர்கள் இல்லாததோடு, எம்.சி.ஐ.,யின் ஆய்வின் போது, வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போலி அடையாள அட்டை வழங்கியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள், எம்.சி.ஐ.,யின் அங்கீகாரம் பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மட்டும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் வருவதால், இக்கல்லூரி வரும் பொது கலந்தாய்வில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விளக்கம் தர யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறும்போது, ""தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருக்கிறதா அல்லது நடவடிக்கை என்ன என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை,'' எனத் தெரிவித்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About