Thursday, May 31, 2012

thumbnail

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை மாற்றுவது குறித்து, தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்தான் முடிவு செய்யப்படும்

சென்னை: "பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை மாற்றுவது குறித்து, தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்தான் முடிவு செய்யப்படும்,' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை, கடந்த மாதம் 11ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. மொத்தம், இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 243 விண்ணப்பங்கள், விற்பனை ஆகி உள்ளன. கடைசி இரண்டு நாளில் மட்டும், 5,291 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளதால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது. வழக்கமாக, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்திற்கு பின் தான், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கும். இந்த ஆண்டு, ஜூலை 2ம் தேதி துவங்குவதாக இருந்த மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு, ஜூலை 5ம் தேதி மாற்றப்பட்டது. இதனால், பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு தேதி மாற்றப்படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியபோது, ""பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, ஜூலை 9ம் தேதி துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேதியை மாற்றுவது குறித்து, அடுத்த வாரம் நடைபெறும், மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்தான் முடிவு செய்யப்படும்,'' என்றார்
thumbnail

கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு மே 1-ம் தேதி முதல் அனைத்து அரசு, உதவி பெறும், சுயநிதி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.இந்த நிலையில் கோடை வெயில் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் புதுவையில் மட்டும் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வெள்ளிக்கிழமை (ஜூன் 1) காலை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.
thumbnail

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.இது தொடர்பாக தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து பணி நியமனத்துக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2004-ல் பதிவு செய்துள்ளேன். பணி நியமனத்தில் மாநிலப் பதிவு மூப்பை கணக்கில் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்ட விதிகள் வகுக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்ய தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கான தகுதி வரையறை செய்யப்பட்டு, 2011 நவம்பர் 15-ல் அரசு ஆணை எண் 181 வெளியிடப்பட்டது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மார்ச் 7-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணை 181-க்கு முரணானது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவிப்புக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த மனுவுக்கு தலைவரும், பள்ளிக் கல்வித் துறை செயலரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
thumbnail

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் துணிந்து ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை

புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ஆம் தேதி, பிகார் அரசு துணிந்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் பிகார் அரசின் அந்த அறிவிப்பு. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும் பழக்கத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து தடை விதித்திருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டுக்குரியவர்.


இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.புகையிலையை, பீடி சிகரெட்டாகப் பயன்படுத்துவோர் ஒருபுறம் இருக்க, புகையில்லாப் புகையிலை வகையறாக்களாக பான், குட்கா, கைணி முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது. பல இடங்களில் இதற்குத் தடை உள்ளது. அபராதம் உள்ளது. ஆனால், நேரடியாகப் புகையிலையை வாயில் அடக்கிக்கொள்ளலாம். இதைச் சட்டம் அனுமதிக்கிறது.
thumbnail

மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கை-வெளிநாட்டுப் பயணங்களுக்கும் கட்டுப்பாடு

புதுடில்லி: செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், மத்திய அரசு துறைகளில் புதிதாக பதவிகளை உருவாக்கவும், நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்களை நடத்தவும், வெளிநாட்டுப் பயணங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

வாகனம் வாங்க தடை: இதுதொடர்பாக, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும், திட்டமில்லா செலவில், 10 சதவீதத்தை குறைக்க வேண்டும். எந்த துறையைச் சேர்ந்தவர்களும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடாது. புதிதாக வாகனங்கள் வாங்குவதும், மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. துறை ரீதியான பணிகளுக்காக அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தினர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, குறைந்த அளவிலான குழுவினரை மட்டுமே, உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அத்துடன், குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்: வெளிநாடுகளில் மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், 10 சதவீதம் குறைவான அளவுக்கே, ஒவ்வொரு அமைச்சகமும் செலவிட வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி, வரும் முன்மொழிவுகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படாது. மத்திய அரசு, ஏற்கனவே ஒதுக்கிய நிதியை அல்லது மானியங்களை சரியாக செலவிட்டதற்கான கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத, மாநில அரசுகள் மற்றும் இதர அமைப்புகளுக்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல், எந்த துறையினரும் நிதி எதுவும் ஒதுக்கக்கூடாது. பேரியல் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த, கிடைக்கும் நிதி ஆதாரத்திற்குள், சரியான வகையில் அனைத்து துறையினரும், செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

கொள்முதல் செலவு: நிதியாண்டின் கடைசி காலாண்டில், கொள்முதல் செலவுகளை, ஒவ்வொரு துறையினரும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வீணானச் செலவுகளை தவிர்க்கலாம். இந்த சிக்கன நடவடிக்கைகளை எல்லாம், அனைத்து அமைச்சகங்களை சேர்ந்த துறையினரும் கண்டிப்பாக, முழுமையான அளவில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, நிதி அமைச்சக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 30, 2012

thumbnail

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன்

உலக செஸ் சாம்பியன்ஷிப்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன், இஸ்ரேலின் போரீஸ் ஜெல்பாண்டு இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் பெற்று வெற்றியாளரை முடிவு செய்ய முடியாமல், போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதல் சுற்று டை பிரேக்கரில் முடிய, 2வது போட்டியில் காய்களை விரைவாக நகர்த்திய ஆனந்த்தின் தாக்குதலில் ஜெல்பாண்டு திணறினார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், 1 வெற்றி, 3 டிரா மூலம் 2.5 புள்ளிகளை பெற்றார். ஆனால் ஜெல்பாண்டு சில தவறான காய் நகர்த்தல் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Tuesday, May 29, 2012

thumbnail

முல்லை பெரியாறு அணை குறித்து தயாரிக்கப்படும் மலையாள திரைப்படத்தில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார்


பீதி கிளப்புகின்றன:தமிழக -கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை குறித்து, இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் பிரச்னை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில், கேரள மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், அணை பலமிழந்து விட்டது என்றும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றெல்லாம் பீதியை கிளப்பி வருகின்றன.இந்த சம்பவங்கள் குறித்தும், அணை உடைந்தால் ஏற்படும் அபாயம் குறித்தும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், "ஜங்ஷன்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தான், கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பேராசிரியர் வேடத்தில் நடித்து வருகிறார்.

வசனங்கள் பதிவு : அணைக்கட்டு குறித்து ஆய்வு நடத்த வரும் மாணவர்களிடம், அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளிக்கும் காட்சியில் அவர் நடித்து வருகிறார். படத்தில் அவர் பேசும் வசனங்களை பதிவு செய்யும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே தைக்காடு பகுதியில் உள்ள தனியார் ஒலிப்பதிவு கூடத்தில் மிகவும் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது. இதில், அமைச்சர் ஜோசப் கலந்துகொண்டு, அவரே தனது குரலில் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசினார்.இப்படத்தை சசிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். கேரள அமைச்சரவையில் வனம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வரும் கே.பி.கணேஷ்குமார், பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர். அவரை தொடர்ந்து, தற்போது பி.ஜே.ஜோசப்பும், நடிகர் என்ற புது அவதாரம் எடுத்துள்ளார்.
thumbnail

மருத்துவ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால நீட்டிப்பு

வரும் 2012-13ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பம் பெற்றுள்ள மாணவ, மாணவியர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜுன் 6ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் அறிவித்துள்ளார். அதேப்போல, முதல் கட்டக் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் ஜுன் மாதம் 25ம் தேதி வெளியாகும் என்றும், முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஜுலை மாதம் 5ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
thumbnail

மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்-ஜெகன்மோகன் ரெட்டியின் கைது

மிரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி தன் மீதே நம்பிக்கை இழந்துவிட்டதன் வெளிப்பாடுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் கைது விவகாரம்.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் மீது சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைக்கும் மத்திய அரசுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லைதான். சில வாரங்களுக்கு முன்பு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்குடன் தொடர்புடைய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் கனிமத் துறை பொறுப்பு வகித்தவரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான வெங்கட்ரமண ரெட்டியையும் கைது செய்துள்ளனர். எல்லாம் சரி. ஆனால், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் ஜெகன் மோகனைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரும் எழுப்பும் கேள்வி.ஆந்திர மாநிலத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய எல்லா தொகுதிகளிலும் போட்டியில் உள்ளது. அப்படியிருக்கும்போது, வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரசாரம் தொடங்கப்பட வேண்டிய நாளில் அவரைக் கைது செய்து, அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று சிபிஐ வாதாடுகிறது. ஜூன் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.இந்தத் தேர்தலில் அவர் பிரசாரம் செய்தால், வெற்றி கிடைக்குமா, கிடைக்காதா என்பதல்ல பிரச்னை. ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யும் வாய்ப்பைத் தடுப்பது முறையா என்பதுதான் கேள்வி. மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பிள்ளையாக இருக்கிறது சிபிஐ என்கிற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது, மத்தியப் புலனாய்வுத் துறையின் இந்த நடவடிக்கை.காங்கிரஸýக்கு எதிரான வாக்குகள் ஜெகன்மோகனுக்கு ஆதரவாகச் சென்றுவிடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. ஆகையால்தான் இத்தகைய நடவடிக்கையை, அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்துகிறது என்று ஜெகன்மோகனின் தாயார் குற்றம் சாட்டும்போது அது நம்பும்படியாக இருக்கிறது. மக்களின் அனுதாபத்தைப் பெறும் வகையிலும் இருக்கிறது.இடைத்தேர்தலில் போட்டியிடும் 16 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் சட்டப்பேரவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும்கூட தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆந்திர சட்டப்பேரவைத் தலைமைக் கொறடா காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் அறிவுறுத்தினார். சட்டப்படி அது சாத்தியமில்லை என்று கூறி, வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.ஜெகன்மோகன் ரெட்டி பெயரில் வருவாய்க்கு அதிகமான சொத்து காணப்படுகிறது என்பதை விசாரணை செய்து, சிபிஐ தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதை நாம் குற்றம் காணவோ குறை கூறவோ இல்லை. இந்தச் சொத்து மிகக் குறுகிய காலத்தில் வந்து குவிந்தவை என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில்தான் இந்தச் சொத்துகள் சேர்ந்துள்ளன என்கிற சிபிஐயின் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.நமது பஞ்சாயத்து உறுப்பினர்களிலிருந்து, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் என்று முறைகேடாகச் சொத்து சேர்க்காதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பாரபட்சமே இல்லாமல் முறையாகச் சோதனை நடத்தினால் 5% பேர்கூடத் தேறுவார்களா என்பது சந்தேகமே. தேர்தலுக்குத் தேர்தல் நமது மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு அதிகரிக்கிறதே, அது எப்படி, ஏன் என்று கேட்கக்கூட நாம் தயாராக இல்லையே, இந்த நிலையில் மாட்டிக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டியை மட்டும் குறை கூறி என்ன பயன்? அதற்காக அவரை நாம் நியாயப்படுத்தத் தயாராக இல்லை.காங்கிரஸ் தலைமைக்கும், ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும் தன்னம்பிக்கை இல்லை என்பதுடன் தோல்வி பயம் பேயாய்ப் பிடித்தாட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் பல எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனுக்கு ஆதரவாகச் சென்றுவிடுவார்களோ, இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துவிடுவோமோ என்று பதற்றம். ஆட்சி போய்விடுமோ என்ற அச்சம்.காங்கிரஸின் முக்கியத் தலைவராகவும் ஆந்திர முதல்வராகவும் இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இந்த அளவுக்குச் சொத்துகளை வாங்கிக் குவிக்க முடிந்ததற்குக் காரணம் அவரது தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசுதான். இப்போது அவரது மகனைச் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்வதும் காங்கிரஸ் அரசுதான். அந்த வகையில் இந்த வழக்கில் நியாயமாகப் பார்த்தால் குற்றவாளி - அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும். தனது முதல்வர் பதவியைப் பயன்படுத்தி முறைகேடாக சொத்து வாங்கிக் குவித்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியைத் தட்டிக் கேட்கத் தவறிய காங்கிரஸ் தலைமை, இப்போது அவரது மகன் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருப்பதைப் பார்த்துப் பயந்து அவருக்கு எதிராகக் களமிறங்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.இந்த இடைத்தேர்தலில் நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்றால், ஜெகன்மோகன் ரெட்டி பிணையில் வெளியே வந்து பிரசாரம் செய்வதற்கு சிபிஐ மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. முதலில் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தபோதிலும், இரண்டாவதாகத் தாக்கல் செய்திருக்கும் பிணை மனுவை நீதிமன்றம் அனுமதித்து, சிபிஐயின் கருத்தைக் கேட்டுள்ளது. இந்த விசாரணை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இனியும் பிணை வழங்கக்கூடாது என்று சிபிஐ வாதிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல.ஏற்கெனவே எல்லா ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஜெகன்மோகன் பிணையில் வந்து தடயங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ மீண்டும் கூறும் என்றால், அது அரசியலாகவும், மத்திய ஆளும் கட்சியின் உத்தரவாகவும் இருக்குமே தவிர, நேர்மையின் வெளிப்பாடாக இருக்காது.யானை பருத்த உருவமும் வலிய தந்தங்களும் கொண்ட மிருகம். ஆனால், சில நேரங்களில் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும். ஜெகன்மோகன் ரெட்டியைக் கைது செய்யும் காங்கிரஸ் கட்சியின் பதற்றமான முடிவு யானை தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானதாகத்தான் இருக்கிறது.

Monday, May 28, 2012

thumbnail

விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீ


விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட்: மன்னர் ஜவகர் பேட்டி
   May 2012         
 பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலை, குரோம்பேட்டை எம்ஐடி உள்பட 59 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக விண்ணப்பம் அச்சடிப்பது மற்றும் பிளஸ்2 தேர்வு ரிசல்ட்டை கருத்தில் கொண்டு கடந்த 3 நாட்களாக விண்ணப்ப வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பிறகு, வினியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்ப கவுன்டர்களை சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் பார்வையிட்டு, மாணவர்களிடம் பிரச்னைகள், குறைகளை கேட்டறிந்தார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பொறியியல் சேர்க்கை கவுன்சலிங்குக்காக முதல்கட்டமாக 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் மேலும், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கான 2ம் கட்ட வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. வரும் 31ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி. இறுதி தேதி நீட்டிக்கப்படாது. தமிழகத்தில் தற்போது 2.20 லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் உள்ளன. இதில் 1.60 லட்சம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். மேலும், இந்த ஆண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது..
thumbnail

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

தமிழகம் சாதனை படைக்கும் அளவுக்கு, காற்றாலை மின் உற்பத்தி நேற்று ஒரே நாளில், 3,500 மெகாவாட்டைத் தாண்டியது. காற்றாலை மின் உற்பத்தியால், மின்வெட்டு நீக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக, 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, ஐந்து மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை, மின் வெட்டு இருந்தது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்று வீசும் பருவ காலம் துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கிறது. கடந்த வாரம் வரை, 2,500 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. கடந்த சில தினங்களாக, 3,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.

சாதனை: நேற்று காலையில், 3,516 மெகாவாட் அளவுக்கு அதிகபட்ச உற்பத்தியானது. காற்றாலை வரலாற்றில், இந்தியாவில் ஒரே நாளில் எந்த மாநிலத்திலும், இவ்வளவு அதிகமாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆனதில்லை. இதுகுறித்து, மின்துறை உற்பத்திப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதிக அளவு காற்றாலை மின்சார உற்பத்திக்கு உகந்த இடமாக உள்ளது. இயற்கையாகவே உயர்ந்த மலைகளும், உயரம் குறைந்த குன்றுகளும், கணவாய்ப் பகுதிகளும் கலந்த பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் உள்ளதால், பல இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளதால், மின்சார உற்பத்தியும் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உற்பத்தி: காற்றாலை மின்சாரத்தை பொறுத்தவரை, நண்பகல் மற்றும் பகல் பொழுதை விட, நள்ளிரவிலும், காலையிலும் அதிக அளவுக்கு உற்பத்தியாகிறது. ஆனால், மாலை நேரம் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும் பகல் நேரத்தில், காற்றாலை மின் உற்பத்தி நிலையற்றதாக உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு மின் நிலைய கோளாறுகளாலும், புதிய திட்டங்களின் தாமதத்தாலும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், காற்றாலை மின்சாரம்தான் ஓரளவு நிம்மதியைக் கொடுத்து உள்ளது
thumbnail

சிபிஎஸ்இ +2 தேர்வில் சென்னை மாணவர் சஞ்சய் கணபதி மாநிலத்திலேயே முதல் இடம்

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தியாவில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 749 மாணவ-மாணவியர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 80.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.94 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 86.21 சதவீதம் மாணவிகளும், 75.80 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

10 மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 67,707 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். அதில் 61,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராகவும், சென்னை மண்டலத்தில் 2வது மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னை மண்டலத்தில் 90.59 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 3,275 மாணவிகள், 4, 534 மாணவர்கள் என மொத்தம் 7, 809 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,315 மாணவிகளும், 4,324 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.85 சதவீரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

புதுவையில் 249 பேர் தேர்வு எழுதினர். அதில் 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் உடனடி தேர்வு எழுத வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உடனடி தேர்வு வரும் ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறும். 

விடைத்தாள்களை சரிபார்க்க விரும்புபவர்கள் இன்று முதல் 5 நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். 

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நாட்டிலேயே சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
thumbnail

எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள்

நேற்று வரை ஓட்டிக் கொண்டிருந்த "பங்க்'குகள் கூட, போலீஸ் பாதுகாப்போடு, பெட்ரோல் வினியோகம் செய்யும் நேரம் வந்துவிட்டது. பாரபட்சமில்லாமல், எல்லா "பங்க்'குகளிலும், சாலை வரை வரிசை நீள்கிறது.
போலீஸ்கா()ர்கள், தலைக்கு மேல் சிவப்பு விளக்கு சுழல்பவர்கள், வரிசையை மீறி எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடிகிறது. சாமானியர்கள் என்ன செய்வது? இருக்கிற பெட்ரோலை மிச்சப்படுத்தலாம்.
எரிபொருளை மிச்சப்படுத்துவதால் என்ன பலன்? மிச்சமான எரிபொருளை மட்டும் வைத்து, சென்னையிலிருந்து மதுரை வரை சென்றுவிட முடியாது தான். அதேசமயம், கூட்டம் அதிகமிருக்கும் "பங்க்'கைத் தவிர்த்து, அடுத்த "பங்க்' வரையாவது செல்ல முடியும். இல்லாவிட்டால், எந்த வண்டியாக இருந்தாலும், தள்ளு வண்டியாக மாறிவிடும்.
எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள் இதோ:
* முதலில், வாகனத்தை, "சர்வீஸ்' செய்யுங்கள். எண்ணெய் கசிவு நீக்குங்கள். "மைலேஜ்' பரிசோதனை செய்யுங்கள்.
* சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடுங்கள்.
* தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், "பிரேக்' பிடிக்காதீர்கள்.
* எந்நேரமும், "கிளட்ச்'சில் கால் / கை வைக்காதீர்கள்.
* குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த, "கியரோ' அந்த வேகத்தில் அந்த, "கியரை' பயன்படுத்துங்கள்.
* இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாதீர்கள்.
* எந்தப் பயணம் மேற்கொள்ளும் முன்பும், இது தேவை தானா என ஒரு முறை சிந்தியுங்கள். முடிந்தால், தொலைபேசியிலேயே வேலையை முடிக்கப் பாருங்கள்.
* குழுவாகச் செல்லும்போது மட்டும் படகு கார்களைப் பயன்படுத்துங்கள்.
* தனியாகச் செல்ல நேர்ந்தால், இரு சக்கர வாகனங்கள் உத்தமம்.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.* ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகுங்கள். நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
thumbnail

சென்னையில் டீசலை தொடர்ந்து பெட்ரோலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் எந்த வாகனத்தையும் இயக்க முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை நகரில் உள்ள ஒரு சில பெட்ரோல் நிலையங்களை தவிர மற்ற அனைத்து நிலையங்களிலும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. சில நிலையங்களில் ஒட்டு மொத்தமாக பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சில நிலையங்களில் குறைந்த அளவே எரிபொருள் கிடைப்பதால், வாகன ஓட்டிகள் அதிகாலை முதலே பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச்செல்கின்றனர். இது குறித்து விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த அளவே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதாக கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டிற்கான காரணத்தை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
thumbnail

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.


இந்த தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3 ஆம் நடைபெறுவதாக இருந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத, சுமார் எட்டரை லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்  பணிக்கு சேரும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
thumbnail

தீ விபத்துக்குப் பிறகு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை மூன்றாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூர், மே. 28: தீ விபத்துக்குப் பிறகு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை மூன்றாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட், இரும்புத் தூண்கள், கேபிள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதனால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 840 மெகா வாட் மின்னுற்பத்தி தடைபட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட கழிவுகள், இரும்புத் தளவாடங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நிலக்கரி சேமிக்கும் பங்கர் பகுதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டில் திங்கள்கிழமை மின் உற்பத்தி முழுவீச்சில் தொடங்கியது.
இதுகுறித்து மேட்டூர் அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் எம்.மாது கூறியது:
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மின் வாரியத் தலைவரின் வழிகாட்டுதல்படி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்றன.
இந்தப் பணியில் 350 தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். பணிகள் விரைவாக நடைபெற்றதால் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திங்கள்கிழமை மின் உற்பத்தி தொடங்கியது. இதில் 210 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மற்ற மூன்று யூனிட்களும் படிப்படியாக இயக்கப்பட்டு வியாழக்கிழமைக்குள் (மே 31) மேட்டூர் அனல் மின் நிலையம் முழு உற்பத்தியைத் தொடங்கும் என்றார் அவர்.
பாராட்டு: குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுத்ததற்காக அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு 840 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி செய்த நான்கு அலகுகளும் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்த விவரங்களை சட்டப் பேரவையில் தெரிவித்தேன். 840 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கும் வகையில் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.
இப்போது, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரும்புக் கழிவுகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் கடந்த 14-ம் தேதியன்று தொடங்கப்பட்டன. இதன் காரணமாக, 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாம் அலகு திங்கள்கிழமை காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
மேலும், எஞ்சிய மூன்று அலகுகளும் படிப்படியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வரும் 31-ம் தேதி முதல் தனது முழுத் திறன் அளவான 840 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யத் தொடங்கும்.
மிகக் கடினமான சீரமைக்கும் பணியில் இரவு பகல் பாராது முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய தமிழக மின்வாரிய தலைவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
thumbnail

சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்.

ஐ.பி.எல். கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் தவறவிட்டனர். அதிக நம்பிக்கையே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.

பிளேஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி அதிர்ஷ்டவசமாக பெற்றது. 3 நிலைகள் (ராஜஸ்தான் அணி டெக்கானிடம் தோல்வி, டெல்லியிடம் பஞ்சாப் தோல்வி, பெங்களூர் அணி டெக்கானிடம் தோல்வி) சென்னைக்கு சாதகமாக அமைந்ததால் வாய்ப்பு கிடைத்தது. 

எலிமினேசனில் சென்னை அணி 187 ரன் குவித்து மும்பையையும், “குவாலி பையர்-2” போட்டியில் 222 ரன் குவித்து டெல்லியையும் வீழ்த்தி சூப்பர்கிங்ஸ் 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

மும்பை, டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி விட்டதால் கொல்கத்தாவையும் வென்று விடலாம் என்று சென்னை அணி வீரர்கள் அதிகமான நம்பிக்கையில் இருந்தனர். சென்னை அணியின் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும்போது 200 ரன்னை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிகமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாததால் 190 ரன்னுடன் ஆட்டம் முடிந்தது. இந்த ரன் போதுமானதுதான் என்று டோனி தோல்விக்கு பிறகு கூறினார். 

இந்த ரன்னுக்குள் கொல்கத்தாவை மடக்கி விடலாம் என்று சென்னை வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பிஸ்லா - காலிஸ் ஜோடி அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது. 

சென்னை அணி வீரர்கள் இன்னும் கொஞ்சம் உஷாராக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அதிகமான நம்பிக்கையால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி அதற்கு தகுதியானதே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sunday, May 27, 2012

thumbnail

ஜூலை 5-ந்தேதி நடக்கும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு 38,500 பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடந்த மே 15-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 38,500 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றுள்ளனர்.


விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவரிசை பட்டியல் ஜூன் 25-ந்தேதி வெளியிடப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்-ஆப் மதிப்பெண் போட்டி உள்ளது. இதனால் எம்.பி.பிஎஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் கட்-ஆப் மதிப்பெண் 190-க்கு கீழ் பெற்றுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிப்பார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

கடந்த ஆண்டு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
thumbnail

ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய பயணிகள்

பெட்ரோல் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்ட நிலையில் அடுத்து என்னென்ன விலை உயர போகிறதோ என்ற கவலை ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வேலைக்கு செல்வோர் ஆட்டோவை நாடி செல்கின்றனர். பணம் செலவானால் பரவா இல்லை. சரியான நேரத்துக்கு செல்லவேண்டும் என்று ஆட்டோவில் ஏறுகிறார்கள். ஆனால் பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்டது.

2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் செல்லும் சிலர் கட்டணம் கட்டுப்படியாகாததால் மாற்று வழியை யோசிக்கிறார்கள். அவர்கள் மனதில் முதலில் தோன்றுவது சைக்கிள் ரிக்ஷாதான். சைக்கிள் ரிக்ஷா தொழில் சென்னை நகரில் சைக்கிள் ரிக்ஷாவை வால் டாக்ஸ் ரோடு, சவுகார்பேட்டை, யானைகவுனி, வடசென்னை பகுதிகளில் அதிகம் காணலாம்.

புரசை வாக்கத்திலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. சைக்கிள் ரிக்ஷாவில் வயதானவர்கள், வடநாட்டுக் காரர்கள்தான் அதிகம் சவாரி செய்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் கூடுதல் நேரமானாலும் பரவாயில்லை என்று சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாற தொடங்கி விட்டார்கள்.

வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்த ரிக்ஷா ஓட்டுபவர்களின் கருத்து வருமாறு:-

ரிக்ஷா தொழிலாளி குணசேகரன்:- சென்னை நகரில் 12,827 ரிக்ஷாக்கள் ஓடியது. இப்போது 2,700 ரிக்ஷாக்கள் மட்டும் உள்ளது. இந்திக்காரர்கள் தான் ரிக்ஷாவில் விரும்பி செல்கிறார்கள். அவர்களை நம்பித்தான் எங்கள் பிழைப்பு உள்ளது.


தமிழ் ஆட்கள் ரிக்ஷாவை விரும்புவதில்லை. ஆட்டோ கட்டணம் உயர்வால் சிறிது தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல ரிக்ஷாவை அவர்கள் விரும்புவார்கள். இங்கிருந்து (வால்டாக்ஸ் ரோடு) சவுகார்பேட்டைக்கு செல்ல ரூ.30 முதல் ரூ.40 வரை கேட்போம். ஆட்டோவில் இரு மடங்கு கேட்பார்கள். குறுகலான சந்துக்கள் நிறைந்த சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள் செல்லாது. ஆனால் சைக்கிள் ரிக்ஷா சந்துக்களில் எளிதாக சென்று பயணியின் வீட்டு வாசலில் இறங்கி விடுவோம்.

ரிக்ஷா தொழிலாளி பெரியசாமி:- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வட மாநில பயணிகள் ரிக்ஷாவை விரும்புகிறார்கள். பயணிகளுக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிப்போம். லக்கேஜுக்களுக்கு வசூலிக்க மாட்டோம்.

வடமாநிலத்தை சேர்ந்த குப்தா:- சைக்கிள் ரிக்ஷாவில் செல்வதால் செலவு குறைவு. மேலும் வீட்டு வாசலில் இறக்கி விடுவார்கள். இதனால் நாங்கள் பெரும்பாலும் ரிக்ஷாவைதான் விரும்புவோம். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வட மாநில பயணிகள் குடும்பத்துடன் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் செல்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் தமிழ் ஆட்களில் சிலர் அருகில் உள்ள வீட்டுக்கு  ரிக்ஷாவில் சென்றதை பார்க்க முடிந்தது.

இதுபோல் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்வது அதிகரித்தால் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகளின் வாழ்க்கை முன்னேறும்.
thumbnail

தமிழக சட்டசபையில் அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள்

சென்னை,  தமிழக சட்டசபையில்  அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.. தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கிடந்த தமிழகத்தை மீட்டு முதலமைச்சர் தலைமையில் ஒரு மிகச் சிறந்த நல்லாட்சி மக்கள் போற்றுகின்ற மகத்தான ஆட்சி நடைபெற்று வருவதாக அவர்கள் புகழ்ந்தனர் சூட்டினார்கள்.

தமிழக அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை வரவேற்று, பாராட்டி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள். தலைவர்களின் பேச்சு வருமாறு: செ.கு.தமிழரசன் (அகில இந்திய குடியரசு கட்சி): தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சி திருநாள். நாடு போற்றும் வகையில் சிறப்பானதொரு ஆட்சியை முதலமைச்சர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.இன்று காலை முதலமைச்சரின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு வரும் வழிநெடுக மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி வரவேற்றதை காண முடிந்தது.
அந்த கடற்கரையோரம் குடிகொண்டுள்ள அண்ணாவும், எம்ஜிஆரும் கூட அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.ஒருநல்ல அரசுக்கு உதாரணம் அந்த அரசு மக்களுக்கு நன்மை செய்கிற அரசாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறும் அரசாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார். அது போன்ற மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக மக்களுக்கு நாள்தோறும் நன்மைகள் செய்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்று இந்த ஓராண்டு ஆட்சி சாதனைகளை செய்தித்துறை 7 நூல்களாக கொடுத்திருக்கிறது. பத்திரிகைகளிலும் 4 முழு பக்க விளம்பரமாக கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி இந்த சாதனைகளை பதிவு செய்வதுதான் நாளைய வரலாற்றுக்கு ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிலைத்த, புகழ்மிக்க முதலமைச்சராக நிச்சயம் இவர் அடையாளப் படுத்தப்படுவார். ஆட்சி திறனும், மாட்சிமையும், தனித்துவமும் மிக்க தலைவராக ஒரு தலை சிறந்த தேசியவாதியாக சமூக, சமத்துவவாதியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவேன் என்ற வாக்குறுதிபடி மிக தாராளமாக, ஏராளமான நலத்திட்டங்களை தந்துள்ள இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும். இந்த ஆட்சியும் தொடர்ந்து nullடிக்க வேண்டும். உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை): வாக்களித்த தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தந்து வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார். மீனவர்கள் உயிர் காக்கவும், உடமை காக்கவும் வழிவகை கண்டார். இதே சட்டப் பேரவையில் இலங்கை தமிழர்கள் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்த கருணை உள்ளத்தோடு தீர்மானம் கொண்டு வந்தார்.
thumbnail

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

விவாகரத்து பெற்றாலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: விவாகரத்து ஆன பெண்களுக்கு கணவரின் அசையா சொத்தில் பங்கு அளிப்பதற்கான சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த 2-ந் தேதியன்று திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

இருதரப்பு விருப்பத்துடன் விவாகரத்து கேட்டு மனு செய்யும் தம்பதிகளுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த கால அவகாசத்தை ரத்து செய்யும் வகையில், இம் மசோதா கொண்டுவரப்பட்டது.

ஆனால், அந்த மசோதா, பெண்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், விவாகரத்து பெறுவது எளிதாகி விட்டால், பெண்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.

இதனால், மசோதா மீதான விவாதத்துக்கு சல்மான் குர்ஷித் பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவாகரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த பங்கைப் பெற, விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

thumbnail

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மாதிரி எரிபொருளை அகற்றும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் நாராயணசாமி கூறினார்.

Saturday, May 26, 2012

thumbnail

'ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸ் -நனவாக

சென்னை,  5-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸýம், தலை (முதல்) பட்டத்தை வெல்லும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸýம் களம் காண்கின்றன. லீக் சுற்றுகளில் தடுமாறிய சூப்பர் கிங்ஸ், பிளே ஆஃப் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாயகரமான அணியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் நைட் ரைடர்ஸ் அணியும், லீக் சுற்றில் தொடங்கி பிளே ஆஃப் வரை சிறப்பாக விளையாடியதோடு, பலம் வாய்ந்த அணியாகவே திகழ்கிறது. கடந்த ஆட்டங்களில் பலம் வாய்ந்த மும்பை, டெல்லி அணிகளை வீழ்த்தியிருப்பதால், இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையோடு சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ளும். அதேநேரத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி சிறப்பாகவே விளையாடியிருந்தாலும், இந்த ஆட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு களமிறங்கும்.
thumbnail

29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 26: பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு சில நாள்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளும் தங்களது எதிர்ப்பைக் காட்ட ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது, வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்திராத அடாத செயல். இந்தக் கடும் விலை உயர்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.இன்று நிலவுகிற பொருளாதாரச் சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.மத்திய அரசை தாங்கிப் பிடிக்கும் திமுக தலைவர் கருணாநிதியோ, பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. அதேசமயம், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகம், பல்வேறு மாநிலங்களில்...: சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய அரசு அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கட்சியின் அமைப்புரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புது தில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

About