Showing posts with label madurai bench high court. Show all posts

Saturday, September 01, 2012

thumbnail

பல ஊர்களில் சொத்து குவித்தது அம்பலம் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த டாமின் அதிகாரிகள் 3 பேர் கைது

மேலூர்: கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த  டாமின் அதிகாரிகள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். முறைகேட்டிற்கு மூல காரணமாக இருந்த மேலும் சில அதிகாரிகள் சிக்குவர் என்று தெரிகிறது. கைதான மூன்று பேரும் பல்வேறு ஊர்களில் சொத்துக்களை வாங்கி குவித்த  திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த கனிம வளத்துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் 48 பேர் மீது நடவ டிக்கை எடுக்க  வேண்டுமென கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து பிஆர்பி நிறுவனத்தில் பணியாற்றிய கனிம வளத்துறை முன்னாள் ஊழியர் சண்முகவேல், கீழையூர் டாமின் அலுவலகத்தில் கணக்காளராக வேலைபார்த்த சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலூரில் செயல்படும் கனிம வளத்துறை அதிகாரிகள் 3 பேர் கிரானைட் குவாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டு முறைகேட்டிற்கு உதவியது தெரிந்தது. கனிம வளத்துறை முதுநிலை திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர், சுரங்க பணி துணை அலுவலர்  ரகுபதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை மதுரை எஸ்பி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, முறைகேட்டுக்கு எப்படியெல்லாம் உதவினர் என்பதை அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை,  டாமின் ஊழியர்கள் 4 பேர் இந்த விவகாரத்தில்  கைது செய்யப்பட் டுள்ளனர். உயர் அதிகாரிகள் பலர் இந்த முறைகேட்டுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளனர்.

Thursday, August 30, 2012

thumbnail

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்களை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்க மக்கள் தொடர்பாளர் சடையன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுதாக்கல் செய்தார். அதில் திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

ஊழியர்களின் அலட்சியப் போக்கால் இது நடந்துள்ளது. இது போன்று  நடைபெறாமல் தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஆறுமுகச்சாமி கொண்டடிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு  சார்பில் தலைமை  வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு கூடி விவாதித்தது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தது. திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் எலியை ஒழிக்க தவறிய மருத்துவர்கள், ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே தலைமை நீதிபதி இக்பால், "அரசின் நடவடிக்கைகள் எழுத்து வடிவில்தான் உள்ளது. செயல் பாட்டில் இல்லை'' என்று கருத்து தெரிவித்தார். மனுதாரர் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதாடியதாவது:-

ஆஸ்பத்திரியில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாய்கள் படுத்து இருக்கும் படங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. நோயாளியின் அறையை நாயும் பங்கிட்டு கொண்டது போல் உள்ளது. ஐ.சி.யு.வில் நோயாளி, மருத்துவர், நர்சுகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. நோயாளியின் உறவினர் கூட அனுமதிக்கப்பட  மாட்டார். எனவே ஐ.சி.யூ.வில் எலி எப்படி சென்றது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியதும் தலைமை நீதிபதி குறுக்கிட்டு துளைகள் இருந்திருக்க கூடும் என்றார். தொடர்ந்து வக்கீல் ஜார்ஜ்  வில்லியம்ஸ் வாதாடுகையில், "ஒரு பத்திரிகையில் தாய்-சேய் படம் போட்டு அவர்களைச் சுற்றி எலிகள் இருப்பது போல் கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சி  தலைவர்களுக்கு கறுப்பு பூனை படை பாது காப்பு அளிப்பது போல் நோயாளிகளுக்கு எலிகள் பாதுகாப்பு கொடுப்பது போல் உள்ளது.

ஆஸ்பத்திரிகள் செல்லப் பிராணிகள் வசிப்பிடமாக மாறி வருவதையே காட்டுகிறது'' என்றார். பின்னர்  நீதிபதிகள், "மருத்துவமனைகளில், எலி, பூனை, நாய் தொல்லையை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் 4 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய  வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 

Thursday, May 31, 2012

thumbnail

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரண்டு வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.இது தொடர்பாக தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து பணி நியமனத்துக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2004-ல் பதிவு செய்துள்ளேன். பணி நியமனத்தில் மாநிலப் பதிவு மூப்பை கணக்கில் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்ட விதிகள் வகுக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்ய தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பணி நியமனத்துக்கான தகுதி வரையறை செய்யப்பட்டு, 2011 நவம்பர் 15-ல் அரசு ஆணை எண் 181 வெளியிடப்பட்டது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மார்ச் 7-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணை 181-க்கு முரணானது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் அறிவிப்புக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த மனுவுக்கு தலைவரும், பள்ளிக் கல்வித் துறை செயலரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About