Showing posts with label coal scam. Show all posts

Saturday, September 01, 2012

thumbnail

நிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்


நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரதீய ஜனதா தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. அத்துடன் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதுபற்றி பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:-

சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த இடத்திலும் எந்த தவறும் நடக்கவில்லை.  கணக்கு தணிக்கை அதிகாரி, யூகங்களின் அடிப்படையில்தான் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு என்று கூறியிருக்கிறார். இது தவறான கணிப்பாகும்.

சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, August 30, 2012

thumbnail

நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை: நாளையுடன் கெடு முடிகிறது

பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித்துறையை தன்வசம் வைத்திருந்த காலக்கட்டத்தில் (2004-09), 142 நிலக்கரி சுரங்கங்கள் ஏலமின்றி பல கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. இதில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் கணித்து அறிக்கை அளித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சி.பி.ஐ., தனது முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து நிலக்கரித்துறை செயலாளர், இணைச்செயலாளர்கள் உள்ளிட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முன்னுரிமை அடிப்படையில், துரிதகதியாக சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ள 12 கம்பெனிகள்மீது சி.பி.ஐ.யின் கழுகுப்பார்வை படிந்துள்ளது. அவற்றில் 9 சுரங்கங்கள் சத்தீஸ்கார் மாநிலத்திலும், 3 சுரங்கங்கள் ஜார்கண்ட் மாநிலத்திலும் உள்ளன. இந்த 12 சுரங்கங்களிலும் இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
குறைந்த விலைக்கு இவற்றை ஒதுக்கீடு பெற்றுவிட்டு, கூடுதல் விலைக்கு பிற நிறுவனங்களுக்கு விற்பதற்காகத்தான் இவற்றில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என நம்பப்படுகிறது. இந்த 12 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களையும், நிலக்கரி வெட்டியெடுக்கப்படாதது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் பெறுவதற்காக நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகளை சி.பி.ஐ. குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மாநில அரசிடமிருந்து 3 நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சி.பி.ஐ. கூடுதல் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒதுக்கீடு பெற்றுவிட்டு, இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்காத நிறுவனங்களிடம், அதற்கான விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சி.பி.ஐ. குழுவினரிடம் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் சில நிறுவனங்கள் 2005-ம் ஆண்டே சுரங்க ஒதுக்கீடு பெற்றுவிட்டு இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கவில்லை.
 
இப்படி சி.பி.ஐ. விசாரணை நடந்து வந்தாலும்கூட, முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்த 3 மாதங்களுக்குள், முதல் தகவல் அறிக்கையை (வழக்கு) பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. அந்தக் கெடு நாளை முடிகிறது. ஆனால் இதுவரை நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-வது நாளாக முடக்கம்

நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில் தவறான கொள்கையை கடைப்பிடித்ததால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் நிலக்கரி துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறி வருகிறது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றம் தொடங்கியது முதல் 6 நாட்களாக அலுவல் எதுவும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கிடையே ஒருநாள் விடுமுறைக்குப்பின் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.

அப்போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்கள். சபையில் கடும் அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் காலை 11 மணிக்கு சபை கூடியதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளி ஏற்படுத்தியதால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக 7-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

About