Showing posts with label CAG coal report. Show all posts

Wednesday, August 29, 2012

thumbnail

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ வழக்கு- அதிகாரிகள் கைதாகிறார்கள்/Coal mining scam

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டது. இந்த இழப்பு ஏற்பட்ட காலத்தில் நிலக்கரிதுறையை பிரதமர் மன்மோகன்சிங்தான் கவனித்து வந்தார். எனவே இழப்புக்கு பொறுப்பேற்று அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேணடும் என்று பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன.
 
இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 64 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த சுரங்கங்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் அமைந்துள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களையும் வாங்கி சரிபார்த்தனர். 64 நிலக்கரி சுரங்கங்களுக்கு 1422 விண்ணப்பங்கள் நிலக்கரி அமைச்சகம் வசம் வந்திருந்தது. எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்கள் உரிமம் பெற்றன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
அதன் தொடர்ச்சியாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோரிய விண்ணப்பங்களை ஆய்வு செய்த கமிட்டி உறுப்பினர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 3 மாநில அரசு அதகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
 
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த விசாரணை மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பல நிறுவனங்களுக்கு சிபாரிசு அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
 
சில நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்ற ஏமாற்றுதல், மோசடி, ஊழல் உள்ளிட்ட எல்லா தவறுகளும் நடந்து இருப்பதை விசாரணை தகவல்களில் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
 
இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள விசாரணை தகவல்களின் அடிப்படையில் 6 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பிஐ. முடிவு செய்துள்ளது.
 
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனுமதி பெற்ற 6 நிறுவனங்கள் மீது ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
 
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி செய்துள்ள தனியார் நிறுவனங்களை ஒரே எப்.ஐ.ஆரில் இடம் பெற செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
 
எனவே அந்த எப்.ஐ.ஆரில் 6 நிறுவனங்களை சேர்ந்த பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதனால் நிலக்கரி சுரங்கம் அனுமதி பெற்ற நிறுவன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதுபோல முறைகேடு செய்து அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என்று தெரிகிறது.
 
எனவே சி.பி.ஐ. நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக சிக்குவார்கள். இது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். இதை உணர்ந்த மத்திய நிலக்கரி துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் கெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மட்டுமே நாங்கள் வகுத்தோம். அத்துடன் எங்கள் வேலை முடிந்து விட்டது.
 
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்து அனுமதி கொடுத்ததற்கு அதிகாரிகளே பொறுப்பு என்று கூறியுள்ளார். இதன்மூலம் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு தங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று மத்திய மந்திரி சூசகமாக தெரிவித்துள்ளார். என்றாலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, பிரதமருக்கு தெரிந்தே நடந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பாரதீய ஜனதா கட்சி பிடிவாதமாக உள்ளது.

About