Tuesday, July 28, 2020

thumbnail

+ 2 படித்த உடன் மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் பயில

CLAT – Common Law Admission Test – இந்தியா முழுமைக்குமான 22 மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு. 

https://consortiumofnlus.ac.in/clat-2020/

22  மத்திய அரசு சட்டப் பல்கலைக் கழகங்களில்  B Com LLB, BA LLB, BBA LLB என்று மூன்று பிரிவுகளில் ஐந்தாண்டுப் படிப்பு. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் மாணவருடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு. பெங்களூரில் உள்ள NLSIU, ஹைதராபாத்தில் உள்ள NALSAR, கொல்கொத்தாவின் NUJS முதலானவை உலகத் தரம் வாய்ந்தவை.

1986ல் துவங்கப்பெற்ற NLSIUவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு பிரமிப்படைந்த சந்திர பாபு நாயுடு, தனது மாநிலத்திலும் அப்படி ஒன்று வேண்டும் என்று அன்றைய மத்திய அரசைக் கேட்டு பெற்றுக் கொண்டது தான் NALSAR. தற்போது தெலங்கானா உதயமானதால், விசாகப்பட்டினத்தில் இன்னொறைத் துவக்கியுள்ளார் (மத்திய அரசை நெருக்கி). தமிழ் நாட்டில் திருச்சியில் ஒன்று உள்ளது.

படித்து முடிக்கும் முன்னே வேலை, அல்லது பின்னர் மேற்படிப்புக்கான வாய்ப்புக்கள் என்று உலக சுற்றும் வேலைகள் ஏராளம். பாரதத்தில் தான் பணியாற்றுவேன் என்றாலும் மிகச் சிறந்த சட்ட நிறுவனங்களில் வேலை. கை நிறைய சம்பளம், அந்தஸ்து என்று நல்ல வாழ்க்கை.

வழக்காடுதலில் விருப்பமெனில் (Litigation) அதற்கும் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. ஊடகத் துறையிலும் சட்டம் தொடர்பான கட்டுரைகள், பார்வைகள் என்று செயலாற்றவும் வாய்ப்புள்ளது. அரசுசாரா நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் வேலைகள், நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்றால் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் பதவி என்று வாய்ப்புக்கள் ஏராளம்.

இவை எல்லாவற்றையும் விட, IAS முதலான தேர்வுகளில் சட்டத்தைப் பாடமாகக் கொண்டு எழுதினால் வெற்றி பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.

பாரதத்தின் பொருளியல் வலுவடைவதால் உலக நாடுகளின் நிறுவங்கள் பெருமளவில் முதலீடு செய்கின்றன. ஆகவே இவற்றிலும் சட்ட ஆலோசகர் முதலான வேலை வாய்ப்புக்கள் என்று எதிர்காலம் ஒளிப்பிரவாகம். இதற்காகவென்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள GNLUவில் சீன, ஜெர்மன் மொழிகளைக் கூடக் கற்றுத் தருகிறார்கள்.

CLAT மதிப்பெண்ணைக் கொண்டு, பல தனியார் சட்டப் பல்கலைக் கழகங்களும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். CLAT-PG என்று ஒன்று உள்ளது. இது சட்டத்தில் மேற்படிப்புக்கானது. இதில் வாங்கும் மதிப்பெண்ணைக் கொண்டு BHEL, ONGC, OIL முதலிய மத்திய அரச நிறுவனங்கள் தங்களுக்கான சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 CLAT தேர்வை அனைத்து இந்தியத் தேர்வுகளுக்கான ஆணையம் நடத்தவிருக்கிறது. இணையத்தில் CLAT  https://consortiumofnlus.ac.in/clat-2020/ பாருங்கள். உங்களுக்கான புதிய வாழ்வின் கதவுகள் திறக்கும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About