Friday, October 11, 2013

thumbnail

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பைலின் புயல் வட ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.


ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல்,ஆந்திரா, ஒடிசா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 205 முதல் 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ராணுவம் தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அமைச்சர் .கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். எத்தகையை சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு தாக்கிய சூப்பர் புயலை விட, பைலின் புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவான இடம், கடந்து வந்த பாதை

ஃபைலின் புயல், அந்தமான்- மியான்மர் இடையே வங்கக்கடலில் கடந்த 7-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருக்கொண்டது. அது வலுவடைந்து அடுத்த நாளே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.

அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட்பிளேயருக்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது.

கடந்த 9-ம் தேதி காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதைத் தொடர்ந்து, சென்னை, நாகை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அன்றைய தினம் பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஃபைலின் புயலாக மாற்றம் கண்டது. இதையடுத்து, சென்னை, நாகை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தொடந்து வடமேற்கு திசையில் நகர்ந்த ஃபைலின் புயல், நேற்று மாலை பாரதீப் துறைமுகத்திற்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

வங்கக்கடலில் வடமேற்குத் திசையில் நகரும் ஃபைலின் புயல், இன்று மாலை 6 மணியளவில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோரம் கோபால்பூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 175 முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஒடிஷா மற்றும் ஆந்திராவின் வடக்குப் பதியில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

ஒடிஷாவில் கஞ்சம், குர்தா, பூரி, ஜெகத்சிங்பூர் பகுதிகளிலும், ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் புயலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About