Wednesday, April 10, 2013

thumbnail

தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன: ஜெயலலிதா அறிவிப்பு

தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள், மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார்.

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:
...
திடக் கழிவிலிருந்து மின்சாரம்...
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் 40 முதல் 60 விழுக்காடு திடக்கழிவுகள் மக்கும் தன்மை உடையதாக உள்ளன. அதிக அளவில் திடக் கழிவுகள் உற்பத்தியாகும் காய்கறி அங்காடிகள், உணவகங்கள், திருமணக் கூடங்கள், இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுகளை தினசரி சேகரித்து அவற்றிலிருந்து உருவாகும் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யலாம்.

5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும். எனவே, திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 200 சதுர மீட்டர் பசுமை பகுதி உள்ளிட்ட 625 சதுர மீட்டர் பரப்பரளவில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாநகராட்சிகளிலும்,

கும்பகோணம், பள்ளிப்பாளையம், ஓசூர், பூந்தமல்லி, காயல்பட்டினம், மேட்டூர், திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், கடலூர், பல்லவபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், உதகமண்டலம், ராஜபாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், நாகர்கோவில் மற்றும் பழனி ஆகிய 24 நகராட்சிகளிலும் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும்;

காரைக்குடி, சிவகாசி சிறப்பு நிலை நகராட்சிகளாக உயர்வு...

காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்றார் ஜெயலலிதா.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About