Thursday, December 13, 2012

thumbnail

புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை காமராஜர் சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
 அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடம் காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகே 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
 இதன் நுழைவு வாயில் முகப்பை மாற்றியமைத்தல், முன்பக்க சுற்றுச்சுவரைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவிலும், எழிலூட்டும் பணிகள் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்பட்டன.
 புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்ததோடு, எம்.ஜி.ஆரின் சமாதிக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 புதுப்பொலிவுடன் முகப்பு வாயில், புல் வெளி: நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 அங்குள்ள திறந்தவெளி முழுவதும் கொரிய புல், பிரத்யேகமான செடி வகைகளான பல்மெரியா ஆல்பா, டேட் பாம், ஸ்பைடர் லில்லி, அடினியம் ஆகியவற்றைக் கொண்டு புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 சமாதியைச் சுற்றி கிதார் வடிவில் புதிய நடைபாதையும், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சாய்வு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை ஓரங்களில் துருப்பிடிக்காத இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 சமாதியிலும், சமாதியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வளைந்த இதழ்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெருகேற்றப்பட்டுள்ளது.
 புல்வெளியின் நடுவில் நீருற்றும், நினைவிடத்தின் பின்பகுதியில் செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளன.
 அலங்கார மின் விளக்குகள் போதிய வெளிச்சத்துடன் சமாதி மற்றும் நினைவிடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 உயர் கோபுர மின் விளக்குகள் நுழைவு வாயிலிலும், சமாதியிலும் பொருத்தப்பட்டுள்ளன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About