Saturday, November 24, 2012

thumbnail

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுபடி மருத்துவ கல்லூரி தேர்வு முடிவுகளை திருத்தி வெளியிட வேண்டும். முதலாம் ஆண்டு 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்க வேண்டும். 90 சதவீதமாக உள்ள வருகை பதிவேட்டை 75 சதவீதமாக மாற்ற வேண்டும். தேர்வு மதிப்பெண்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில், நேற்று கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-
 
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் 2-ம் ஆண்டு செல்ல முடியாது. அவர்கள் 6 மாதங்கள் கழித்து மீண்டும் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் 2-ம் ஆண்டு செல்ல வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படும் என்பதால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே எம்.சி.ஐ. விதிமுறைகளுக்கு முரணாக உள்ள இந்த புதிய விதிமுறைகளை மாற்ற வேண்டும்.
 
கேரளா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்கியதை தமிழக அரசும் எம்.சி.ஐ.யிடம் 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்க பரிந்துரை செய்ய வேண்டும். வருகைப்பதிவை பழைய முறைப்படி 75 சதவீதமாக மாற்ற வேண்டும். புதிய விதிமுறைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி பழைய முறைகளை நடைமுறைப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 
இந்தநிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், நேரில் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவாதத்தை நடத்தினார். அப்போது அவர், உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கல்லூரி தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என உறுதி அளித்தார்.
 
அமைச்சரின் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பின்னர் அமைதியாக அனைவரும் கலைந்து சென்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About