Saturday, October 06, 2012

thumbnail

ராமநாதபுரம் அருகே புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் இருந்து 15 நிமிட பயணத் தூரத்தில் உடையநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் புற்றுநோயின் தாக்குதல் அதிக அளவில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் காரணமாக, பலர் இளம் வயதிலேயே அனாதைகளாகி விட்டதாக இந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள் .
வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், பெரிய அளவில் வேலை வாய்ப்புகளோ, தொழில் வாய்ப்புகளோ கிடையாது. போதிய விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் இல்லாததால், புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் இவர்களால் முடியவில்லை.
இந்தக் கிராமம் குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, வாழ்க்கை முறைகளும், சுத்தமின்மையுமே கிராம மக்களுக்கு புற்றுநோய் வருவதற்குக் காரணம் என்று தெரிவித்தனர். எனினும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகக் கூறப்படும் தகவலை அவர்கள் உறுதிசெய்யவில்லை.
இந்தக் கிராமம் தொடர்பாக புதிய தலைமுறை தெரிவித்த தகவலையடுத்து, ஒரு குழு அமைத்து இங்குள்ள கிராமப் பகுதிகளில் சோதனை நடத்த இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் பாலச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About