Wednesday, October 03, 2012

thumbnail

கண்ணாமூச்சு காட்டும் காற்றாலை: ஏறி இறங்கும் மின்சார தடை

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி முழுமையாக சீரடையாததால் தினமும் மின்வெட்டு உள்ளது. சென்னையில் 1 மணி நேரமும் பிற மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகமாகும் போது மின்வெட்டு குறைக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு வந்ததால் சென்னையில் கடந்த 2 நாட்களாக மின் வெட்டு இல்லை. மற்ற மாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

ஆனால் இன்று மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டது. காலையில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தான் கிடைத்தது. இதனால் இன்று சென்னையில் மீண்டும் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்ததால் கடந்த மாதம் மின்வெட்டு அதிகமாக இருந்தது. காற்றாலை மூலம் அதிகபட்சம் 1180 மெகாவாட் மின்சாரம்தான் கிடைத்தது. இதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. பரவலாக மழை பெய்த காரணத்தாலும், காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி தொழிற் சாலைகளில் மின்சார பயன்பாடு குறைந்ததாலும் தாராளமாக மின்சாரம் கிடைத்தது. இதனால் 2 நாட்களாக மின்வெட்டு செய்யப்படவில்லை. இன்று காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் குறைந்து விட்டது. இதனால் பழையபடி மின் வெட்டு தொடருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்க வெளி மாநிலங்களில் இருந்து 3500 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு (2013) மே மாதம் வரை யூனிட் மின்சாரம் ரூ. 4.13ல் இருந்து 5 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என்று ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About